மொடக்குறிச்சி: மாமியாருக்கு மாற்றாக மருமகள்; பா.ஜ.க- வின் தேர்தல் வியூகம் என்ன?

Spread the love

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக கிருத்திகா என்பவரை களமிறக்கியிருக்கிறது தலைமை. அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ – வான சரஸ்வதியின் மருமகளான கிருத்திகாவிற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் கூட்டணி கட்சியினரும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

கிருத்திகா

மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க சார்பில் அண்ணாமலை போட்டியிடலாம் என்கிற எதிர்பார்ப்பு கடைசி வரை நீடித்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் கிருத்திகாவை களமிறக்கியிருக்கிறார்கள். கடந்த 2021 தேர்தலில் தி.மு.க வேட்பாளரை இந்த தொகுதியில் வீழ்த்தி பா.ஜ.க – வை வெற்றி வாகை சூடச் செய்தவர் சரஸ்வதி. இந்தத் தேர்தலிலும் வெற்றியைத் தக்க வைக்கவே அவரின் மருமகளை களத்தில் இறக்கியிருப்பதாக கூறுகின்றனர் அக்கட்சியினர்.

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய ஈரோடு மாவட்ட பா.ஜ.க – வினர்

“மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதியின் மருமகள் மட்டுமல்ல, பா.ஜ.க- வின் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் வேட்பாளர் கீர்த்திகா. அதேவேளையில் மாமியார் சரஸ்வதிக்கு தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த ஆதரவும் மருமகள் என்பதால் இவருக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

கிருத்திகா

தி.மு.க கூட்டணி சார்பில் ம.தி.மு.க- வின் செந்தில் நாதன் மற்றும் த.வெ.க – வின் சண்முகம் ஆகியோரை எதிர்த்து களத்தில் நிற்கிறார் கிருத்திகா. மும்முனை போட்டி நிலவும் இந்த தொகுதியில் சரஸ்வதியின் வாக்குகள் அப்படியே இவருக்கு வர இருக்கிறது. கூட்டணி ஆதரவும் இவருக்கு பலமாக இருக்கிறது. அதேவேளையில் பொருளாதாரத்திலும் குறைவில்லாத குடும்பம் என்பதால் இவரை தேர்வு செய்திருக்கிறார்கள்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *