“மொத்த உடலுக்கும் மருந்து; `செலவு ரசம்' வைக்க தெரிஞ்சா ஹெல்தியா இருக்கலாம்'' – ஊட்டச்சத்து நிபுணர்

Spread the love

தட்பவெப்பம் மாறும்போது சளித் தொந்தரவு ஏற்படும். சுவாசக்கோளாறும் வரலாம். ஜீரணக்கோளாறு, வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் வாயுத்தொந்தரவுகள் தரும் அவஸ்தைகள் பட்டவர்களுக்கே தெரியும். இதனால், உறக்கமும் பாதிக்கப்படும். இவற்றுக்கெல்லாம் ஒரு சர்வரோக நிவாரண உணவு இருக்கிறது. அதுதான் `செலவு ரசம்’.

இதன் செய்முறையைச் சொல்லித்தருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த மரபு உணவு ஆர்வலர் தனலட்சுமி கண்ணுச்சாமி. செலவு ரசத்தின் மருத்துவப்பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா.

செலவு ரசத்தில் அப்படியென்ன சிறப்பு?
செலவு ரசத்தில் அப்படியென்ன சிறப்பு?

சுண்டுகார செலவுப் பொருள்கள் – 1 பங்கு (கடுகு, மிளகு, திப்பிலி, சீரகம், கசகசா, வால்மிளகு, கருஞ்சீரகம், கடல் நுரை, சித்தரத்தை, வெட்டிவேர், பெருங்காயம் அடங்கியது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 100 ரூபாய்க்கு வாங்கினால் மூன்று தடவை பயன்படுத்தலாம்).

சின்ன வெங்காயம் – 1 கப், பூண்டு – 5 பல், சீரகம் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, கொத்தமல்லித்தூள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – 3 கொத்து, தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை – 1 கொத்து, பெருங்காயம் – 1 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

ரசமும் ரசப்பொடியும்..
ரசமும் ரசப்பொடியும்..

முதலில், பாதி அளவு சின்ன வெங்காயம், பூண்டு, சுண்டுகார செலவுப் பொருள்கள், சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லித்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள்.

மீதம் இருக்கும் சிறிய வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதில் போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அரைத்துவைத்துள்ள விழுதை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கரைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

பிறகு, கொத்தமல்லித் தழையைச் சிறு துண்டுகளாக வெட்டித் தூவி, இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைவிட்டு இறக்குங்கள். சுடு சோற்றில் இதை ஊற்றிச் சாப்பிட, அமுதம் போன்று இருக்கும்.

ஆழ்ந்து உறங்கவும் செலவு ரசம் உதவும்!
ஆழ்ந்து உறங்கவும் செலவு ரசம் உதவும்!

செலவு ரசத்தின் மருத்துவப்பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா.

”நம் பாரம்பர்ய உணவுப் பட்டியலில் மிகவும் குறிப்பிடத்தக்கது இந்தச் செலவு ரசம். இதை, ‘மொத்த உடலுக்குமான மருந்து’ என்றும் சொல்லலாம்.

இதன் சிறப்பே அதன் சுவைதான். இதில் நிறைய மருத்துவப் பொருள்கள் கலந்திருந்தாலும், சுவையில் அந்தக் குணம் தெரியாது. வயிற்றுக்கோளாறுகள், வாயுசார்ந்த பிரச்னைகள், சுவாசச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்கும்.

இவை தவிர தாதுப்பொருள்கள், நார்ச்சத்து, வைட்டமின்களும் இதில் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள், வயதானவர்கள், பிரசவம் முடிந்த பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

காய்ச்சல் இருப்பவர்களுக்கு இது ஏற்ற உணவு. தாய்ப்பால் தரும் பெண்கள் இந்த ரசத்தைக் குடித்தால், குழந்தைக்கு எதிர்ப்புச்சக்தி கூடும்.

உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டுமின்றி மனம் சார்ந்த பிரச்னைகளுக்கும் இதில் தீர்வு இருக்கிறது. மனக்குழப்பங்கள் நீங்கி ஆழ்ந்து உறங்கவும் இந்தச் செலவு ரசம் உதவும்” என்கிறார்.

என்ன, செலவு ரசம் வைத்து சாப்பிட நீங்கள் தயாரா..?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *