ராணிப்பேட்டை: “மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், தமிழகத்தின் மொழி உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6- வகுப்பறை கட்டிங்களின் திறப்பு விழா இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இதில், பங்கேற்க பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்திருந்தார். முன்னதாக சிப்காட்டில் உள்ள விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறியது: “தமிழகத்தின் மொழி உணர்வை, மத்திய அரசு மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் புரிந்து கொள்ளவில்லை. தாய்மொழி நம்முடைய உயிர் மொழி என்று அவர்களுக்கு புரியவில்லை. புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும்போது முறையான வல்லுநர்களின் கருத்தை கேட்டு அதனை வடிவமைக்கவில்லை. மத்திய அரசிடம், தவறான கொள்கை மற்றும் மரியாதையை இழந்து நிதியை பெற வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
மக்களவைத் தொகுதி சீரமைப்பு விவகாரத்தில் அரசியல் பார்க்காமல் அனைத்து கட்சியினரும் ஒன்றாக செயல்பட்டு தீர்வு காண வேண்டும். மத்திய அரசு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஒரு கோடி கையெழுத்தைப் பெற தமிழகத்தின் பள்ளிகளின் வாசல்களில் நின்று கையெழுத்து வாங்குகின்றனர். அவர்கள் வேண்டும் என்றால் வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்குங்கள். ஆனால், பள்ளிக்கூட வாசல்களில் நின்று கொண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை கொடுத்து கையெழுத்து பெறுவது ஏன்?
அவ்வாறு கையெழுத்து பெறும் நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். டிஆர்பி தேர்வு அட்டவணை கூடிய விரைவில் வெளியிடப்படும்,” என்றார். அப்போது அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.