மொழிக் கொள்கை விவகாரம்; மத்திய அரசின் செயல்பாடு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு | central government actions are against the Constitution: Jayakumar

1351349.jpg
Spread the love

மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாரோடு தொடர்பில் இருக்கிறார் என்று நன்றாகவே தெரியும். நீட் ரகசியம் தெரியும் என்று சொன்னவர் துணை முதல்வர் உதயநிதி. அவர்களோடு தொடர்பில் இருந்து இவருக்கும் நோய் ஒட்டிக் கொண்டது. இதனாலேயே அவர் சில ரகசியங்கள் இருக்கின்றன என்கிறார். அப்படியானால் சொல்ல வேண்டியது தானே. ரகசியம் என்று சொல்லி தொண்டர்களை ஏமாற்றும் வேலையை தான் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் செய்கின்றனர். இது தொண்டர்கள் மத்தியில் எடுபடாது.

மொழியை திணிக்கக் கூடாது. இதையே முன்னாள் முதல்வர் அண்ணாதுரையும் வலியுறுத்தினார். பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேர ஆர்வம் காட்டுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதன் மூலம் திமுக அரசின் சந்தர்ப்பவாத இரட்டை வேடம் வெளிப்பட்டுவிட்டது. தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி கொடுத்ததாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகிறார். தமிழக மக்கள் கொடுத்த வரியை தானே திருப்பி கொடுத்துள்ளனர். இப்படி சொல்லும் மத்திய அமைச்சர், உத்தரபிரேதசம், பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வீட்டு பணத்தையா கொடுத்தனர். தமிழகத்தை எவ்வளவோ இயற்கை பேரிடர் பாதித்துள்ளது. இதற்கு நிவாரணம் கோரி கடிதம் எழுதினால் 100 சதவீதத்தில் 20 சதவீதம் மட்டுமே கொடுக்கின்றனர். வெண்ணெய் ஒரு கண்ணில், சுண்ணாம்பு ஒரு கண்ணில் என்ற வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இது குறித்து தமிழகத்தை ஆளும் திமுக கேள்வி கேட்காது. தமிழகத்தில் காட்டாட்சி தர்பார் நடக்கிறது. அவர்கள் பாஜகவுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். 2026-ம்ஆண்டுக்கு பிறகு பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. ஆனால் அதிமுக தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *