மொழிப்போர் தியாகிகள்: “மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை?" – கேள்வி எழுப்பும் தமிழிசை

Spread the love

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து – நடராசன் நினைவிடத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு நிற உடையில் வருகை தந்தார்.

அங்கு தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ‘மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்’ என முழக்கமிட்டார்.

முதல்வர் ஸ்டாலின்: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை
முதல்வர் ஸ்டாலின்: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை

அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், “வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்! 1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் – தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன்.

மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன். எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன். மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் நீங்கள் அவர்களை சுட்டுக்கொன்ற காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு இந்த வணக்கத்தை செலுத்தினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் ஆன்மாக்கள் தான் ஏற்றுக் கொள்ளுமா?

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை கூப்பிடுவீர்களே இந்த நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களை கூப்பிட்டு இருக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளிலேயே ஹிந்தி கற்பிக்கப்படுகிறதே அவை எல்லாம் தமிழ்நாட்டில் இல்லையா?

இத்தனை முரண்பாடுகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளுமா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே? இனியும் மொழியை வைத்து நீங்கள் போடும் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *