“மொழி அரசியல் இல்லாமல் தமிழக அரசியல் இருக்காது!” – தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் கணையாழி ம.இராசேந்திரன் நேர்காணல் | Kanaiyazhi rajendran interview

1372558
Spread the love

தமிழ்நாட்டை அடுத்து மகாராஷ்டிராவில் இந்தித் திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஆர்ப்பரித்துக் கிளம்பியதால் அம்மாநில அரசு மும்மொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. 2026 தேர்தலில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் பிரதான பிரச்சாரத்தை திமுக முன்னெடுக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், திமுக-வுக்கு நெருக்கமானவராக கருதப்படும் தமிழறிஞரும், தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவருமான கணையாழி ம.இராசேந்திரனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்தி வளர்ந்திருக்கிறதா இல்லையா?

இந்தி எதிர்ப்பு என்​ப​தற்​குப் பதிலாக இந்​தித் திணிப்பு அல்​லது இந்தி ஆதிக்க எதிர்ப்​புப் போராட்​டம் என்று சொல்​லலாம். இந்​தி​யா​வில் உள்ள மற்ற மொழிகளைப் போல இந்​தி​யும் ஒரு மொழி​யாக இருப்​பதை எப்​போதும் யாரும் எதிர்க்​க​வில்​லை. இந்​தி​யோடு அரசி​யல் ஆதிக்​கம் சேரும் போது​தான் எதிர்ப்​புக்கு உள்​ளாகிறது.

இந்​தியை வளர்க்​கும் ஒன்​றிய அரசின் அரசி​யல் முன்​னெடுப்​பு​கள் கூடிக்​கொண்டே வந்​தா​லும் கூட இந்தி மொழி​யின் ஆதிக்​கம் தமிழ்​நாட்​டில் குறைந்​து​கொண்​டே​தான் வரு​கிறது. மொழி ஆதிக்க எதிர்ப்பு கூடிக்​கொண்​டே​தான் வரு​கிறது. காரணம், மொழியோடு சமு​தாய அரசி​யல், பண்​பாட்டு ஆதிக்​கத்​தைச் சேர்ப்​பது​தான். ஆதிக்​கம் செலுத்​தாத இணக்க வாழ்​வுக்கு உரிய – ஏற்​றத்​தாழ்​வு​களை எதிர்க்​கிற – வேறு​பாடு​களை வளர்க்​காத மொழிகளைக் கொண்​டாடலாமே!

திமுக அரசியலில் தொடர்ச்சியாக தமிழ்மொழியும் இடம்பெறுவது குறித்து..?

மனித உரிமை​களின் பட்​டியலில் மொழி உரிமைக்​கும் ஐக்​கிய நாடு​கள் சபை இடம் தந்​திருக்​கிறது. மனிதர்​களைப் போலவே மொழி, வாழ​வும் வளர​வு​மான உரிமை​களைப் பறிக்க யாருக்​கும் அதி​காரம் இல்​லை. சொல்​லப் போனால், மனித உரிமை​களைப் பெற​வும், காப்​பாற்​ற​வும், போராட​வும் மொழி வேண்​டும். மொழிக்கு உரிமை மறுக்​கப்​பட்​டால் மனித உரிமை​கள் மறுக்​கப்​படு​வ​தாகப் பொருள். மொழி உரிமை என்​ப​தில் அரசி​யல் வந்​து​விடு​கிறது.

எல்லா அரசி​யலுக்​கும் மொழி தேவை. அப்​படி​யான மொழிக்கு உரிமை மறுக்​கப்​படு​வ​தி​லும் அரசி​யல் இருக்​கிறது. எதிர்த்​துப் போராடு​வ​தி​லும் அரசி​யல் இருக்​கிறது.உலக மொழி வரலாற்​றில் தீண்​டா​மைக்கு ஆளான மொழி தமிழ். அதைத் தாய்​மொழி​யாகக் கொண்​ட​வர்​களும் பண்​பாட்​டுத் தீண்​டா​மைக்கு ஆளாகி​யிருந்​தார்​கள். அவற்​றி​லிருந்து தமி​ழை​யும் தமி​ழர்​களை​யும் மீட்​டெடுக்​கும் அரசி​யலைத் திமுக தொடர்​கிறது.

தமிழைப் போற்றியதில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பங்கைக் கூற முடியுமா?

இலக்​கிய மாமணி விருது, விரு​தாளர்​களுக்​குக் கனவு இல்​லம், அயல​கப் பல்​கலைக்​கழ​கங்​களில் தமிழ் இருக்​கை​கள், நூல்​கள் நாட்​டுடைமை, தமிழ்ச் சங்​கங்​களுக்கு நிதி​யுத​வி, பாரதி ஆய்​வாளர்​களுக்​குப் பரிசுகள், கால்​டு​வெல் நூல் வெளி​யீடு, தமிழ்க் கணினி மாநாடு போன்று எண்​ணற்ற தமிழ் வளர்ச்​சிக்​கான பணி​களை முதல்​வர் முன்​னெடுத்து வரு​கி​றார். தமிழ் வளர்ச்​சிக்​கழ​கம் தொடர்ந்து செயற்பட ஏதுவாக வைப்​புத் தொகை​யாக ரூ.2 கோடி​யும், இந்த நிதி​யாண்​டுச் செல​வுக்​காக ரூ.15 லட்​ச​மும் தரப்​பட்​டுள்​ளது.

வெளிநாடுகளில் தமிழைப் பரப்ப திமுக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து..?

அமெரிக்​கா​வின் ஹார்​வர்ட் பல்​கலைக்​கழ​கம் மற்​றும் ஹூஸ்​டன் பல்​கலைக்​கழ​கம், கனடா​வின் டோரண்டோ பல்​கலைக்​கழ​கம், ஜெர்​மனி​யின் கொலோன் பல்​கலைக்​கழ​கம் போன்ற புகழ்​மிக்க கல்வி நிறு​வனங்​களில் இருக்கை மற்​றும் கல்விக்​காக நிதி அளித்து தமிழ்​நாடு அரசு உதவி​யுள்​ளது. இணை​யக் கல்விக் கழகம் வழி​யாக​வும் வெளி​நாடு​களில் தமிழ் மொழி இலக்​கி​யங்​களைப் பரப்பி வரு​கிறது.

தமிழ் வளர்ச்சித் துறை முன்னெடுத்த ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்னவாயிற்று? அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக்கும் திட்டம் எந்த அளவில் உள்ளது?

இரண்​டிலும் நல்ல முன்​னேற்​றம் உள்​ளது. ‘எங்​கும் தமிழ், எதி​லும் தமிழ்’ என்​பதை முனைப்​புடன் நிறை​வேற்​று​வதற்​காக உள்ள உதவி இயக்​குநர் துணை இயக்​குநர் பணி​யிடங்​களை நிரப்ப நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இப்​போது அரசுக் கடிதங்​கள், சட்​டமன்ற நடவடிக்​கை​கள் எல்​லாம் தமி​ழில் தான் இருக்​கின்​றன.

தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ச் சங்கம், அகரமுதலி போன்ற நிறுவனங்கள் கவனிக்கப்படாமல் சீரழிவதாக ஒரு கருத்து உள்ளது. இதுபோல், தமிழ் தொடர்பான நிறுவனங்கள் போதுமான நிதியும் பெற முடியாமல், கவனிக்கப்படாமல் இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி..?

கடந்த காலங்​களில் நேர்ந்த குளறு​படிகளாலும் அதி​காரத்​தில் இருந்​தவர்​கள் செய்த கோளாறுகளாலும் இந்​தக் கருத்து எழுந்​தது. அதுகுறித்து இப்​போதைய அரசு மீது பழி கூற வாய்ப்​பில்லை என்றே கருதுகிறேன்.

மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயம் என்பதை மாநில அரசு விலக்கிக் கொண்டிருக்கிறதே..?

நல்ல முன்​னேற்​றம். ஒரு​மொழி​யின் அழி​வுக்​குக் காரண​மான​வற்​றைக் கண்​டு​கொண்​ட​வர்​கள் இப்​படித்​தான் சிந்​திப்​பார்​கள்.

பிரதமர் மோடி, ‘தமிழ்தான் மூத்த மொழி’ எனச் சர்வதேச மேடைகளில் கூறி வருகிறார். இதை தமிழகத்தின் தமிழ் அமைப்புகள் இதுவரை வரவேற்றதாகத் தெரியவில்லையே?

சர்​வ​தேச மேடைகளில் கூற வேண்​டிய கட்​டா​யம் அவருக்கு ஏற்​பட்​டிருக்​கிறது. உலகெங்​கும் பெரும்​பாலும் தமி​ழர்​கள் இருக்​கி​றார்​கள். விடு​தலைப்​புலிகள் உலக நாடு​களில் தமி​ழின் மதிப்பை உயர்த்​திக் காட்டி வைத்​துள்​ளனர். தமி​ழர் நாகரி​கப் பழமை​யை​யும் கீழடி உள்​ளிட்ட தொல்​லியல் ஆதா​ரங்​கள் உறு​திப்​படுத்​துகின்​றன. மோடிக்கு தமிழ் மீது உண்​மை​யான மதிப்பு இருக்​கு​மா​னால் கடந்த கால அரசு தமி​ழைச் செம்​மொழி என்று அறி​வித்​ததைப் போல தமி​ழை​யும் ஒன்​றி​யத்​தின் ஆட்சி மொழிகளில் ஒன்​றாக அறிவிக்​கலாமே. இந்​தி​யா​வின் ஆட்சி மொழிகளில் ஒன்று உலக மொழிகளுக்​கெல்​லாம் மூத்த தமிழ் மொழி என்று சொல்​லிக்​கொள்​ளலாமே!

தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை வர வாய்ப்புள்ளதா?

மத்​திய அரசின் குடிமைப்​பணி அதி​காரி​கள் தாங்​கள் பணிசெய்​யும் மாநிலங்​களின் ஆட்சி மொழி​யில், தன் தகுதி காண்​பரு​வம் நிறைவடைவதற்​குள் தேர்ச்சி பெற்​றாக வேண்​டும். தமிழ்​நாட்​டில் தமிழ் தெரி​யாதவர்​களுக்கு வேலை இல்லை என்று சொல்​வதற்கு இந்​திய அரசமைப்​புச் சட்​டம் இடம் தருமா என்று யோசிக்க வேண்​டும். தமி​ழ​கத்​தில் தமிழ் தெரி​யாதவர்​களுக்கு வேலை இல்லை என்​பதை விட வேலை​யில் சேர்ந்​தவர்​கள் குறிப்​பிட்ட காலத்​திற்​குள் தமி​ழைக் கற்க வேண்​டும் என்​பது இப்​போது விதி​யாக இருக்​கிறது.

நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்களும், வட மாநில எம்பி-க்களும் இந்தியிலேயே பெரும்பாலும் பேசுகின்றனர். ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில எம்பி-க்கள் தங்களின் தாய் மொழியில் பேசுவதில்லையே?

தமிழ்​நாட்​டைச் சேர்ந்​தவர்​கள் பேசுகி​றார்​கள். சில நேரம் அதி​காரத்​துக்கு புரிய வேண்​டும் என்​ப​தற்​காக ஆங்​கிலத்​தில் பேசுகி​றார்​கள் என்று நினைக்​கிறேன். இனி இணை​யத் தொழில் நுட்​பம் மொழி எல்​லை​களை உடைக்​கும். அப்​போது அவர​வர் தாய்​மொழி​யில் பேசி​னால் அடுத்​தவர் தம் தாய்​மொழி​யில் கேட்​டுக்​கொள்​ளும் காலம் வந்​து​ கொண்​டிருக்​கிறது.

தமிழ்நாட்டிலும் அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட ஊடகங்களில் பேசும்போது, ஆங்கில வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்துவது தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதை ஏற்கிறீர்களா?

தமி​ழில் இணை​யான சொற்​கள் இல்​லாத போது – பயன்​பாட்​டிற்கு வரா​த​போது, அவர்​களுக்​குத் தெரி​யாத போது அப்​படிப் பயன்​படுத்​து​வ​தாக நினைக்​கிறேன். ஆனால், தண்​ணீர் என்​ப​தற்​குப் பதிலாக ‘வாட்​டர்’ என்​ப​தைப் போன்று ஆங்​கிலச் சொற்​களைப் பயன்​படுத்​தி​னால் அது தமி​ழின் வளர்ச்​சிக்​குப் பின்​னடைவு​தான்.

திமுக அங்கம் வகித்த யுபிஏ கூட்டணியின் இரண்டு ஆட்சிகளிலும் சர்ச்சையாகாத சம்ஸ்கிருத மொழிக்கான நிதி ஒதுக்கீடு இப்போது சர்ச்சையாவது ஏன்?

சம்​ஸ்​கிருத மொழிக்​கான நிதி எதற்​காக ஒதுக்​கப்​படு​கிறது என்ற நோக்​கத்​தைப் பார்க்க வேண்​டும். இந்​தியா முழு​வதும் ஒரே மொழி​யின் ஆட்​சி​யில் இருக்க வேண்​டும் என்ற எண்​ணத்​தில் திமுக அங்​கம் வகித்த இரண்டு ஆட்​சிகளும் இல்​லாமல் இருந்​திருக்​கலாம். அல்​லது அப்​படி​யான எண்​ணம் அவர்​களுக்கு ஏற்​பட​வி​டா​மல் திமுக-​வால் தடுக்க முடி​யும் என்று நம்​பி​யிருக்​கலாம். அந்த நம்​பிக்கை பொய்​யாக​வில்​லை​யே… உதா​ரண​மாக, செம்​மொழி எக்​ஸ்​பிரஸ் எனும் பெயரில் அப்​போது வந்​தவை எல்​லாம் இப்​போது வந்தே பாரத், தேஜஸ் என மாறி​விட்​டன​வே.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இந்தி பேசப்பட்டாலும் இந்தித் திணிப்பை அவர்கள் எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தி பேசாத போதும் இந்தி எதிர்க்கப்படுகிறது. இவ்விரண்டு நிலைப்பாட்டையும் ஒப்பிடுங்களேன்?

மகாராஷ்டி​ரா​வினர் வந்த பின் விழித்து எதிர்க்​கி​றார்​கள். தமிழ்​நாட்​டில் வரும்​போதே வாசலிலேயே எதிர்க்​கி​றோம்.

முதல்வர் ஸ்டாலினை தலைவராகக் கொண்ட மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மையாகச் செயல்படுகிறதா?

ஒன்​றிய அரசின் நிறு​வனத்​திற்கு மாநில முதல்​வர் தலை​மை. பாராட்​டும் படி​யாகத்​தான் செயற்​படு​கிறது. நிறைய நூல்​கள் வெளி​யாகின்​றன. 2011-ம் ஆண்​டிற்​குப் பின் வழங்​கப்​ப​டா​மல் இருந்த 10 ஆண்​டு​களுக்கு உரிய கலைஞர் செம்​மொழி விருதுகளை​யும் அதற்​குப் பிறகும் தாமதமில்​லாமல் ஒவ்​வொரு ஆண்​டும் வழங்கி வரு​கி​றார்.

தமிழின் முக்கிய நூல்களை இந்தியில் மொழிபெயர்க்க கருணாநிதி முதல்வராக இருந்த போது ‘குறள் பீடம்’ எனும் அமைப்பை உருவாக்கினார். ஜெயலலிதா காலத்தில் மூடப்பட்ட அந்த அமைப்பு மீண்டும் துவக்கப்படுமா?

தமிழ்​நாடு அரசு பாடநூல் நிறு​வனம் வழி​யாக தற்​போது மொழிபெயர்ப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

2026 தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளின் தமிழ் மொழி, இந்தி எதிர்ப்பு இதுபற்றி எல்லாம் பேசும் என்கிறார்களே?

ஆம்! மொழி அரசி​யல் ஓயாது. மொழி வழி அதி​கார​மும் அடக்​கு​முறை​யும் ஏற்​றத்​தாழ்​வும் கட்​டமைக்​கப்​பட்​டுக் காப்​பாற்​றப்பட நினைக்​கிற எண்​ணம் இந்​திய அரசி​யலில் இருக்​கும் வரை தமிழ்​நாட்டு அரசி​யலில் இந்தி எதிர்ப்பு இருக்​கும்.

மொழி அரசியல் பேசி ஆட்சியைப் பிடிப்பது தமிழகத்தில் இனியும் சாத்தியம் என நினைக்கிறீர்களா?

மனிதர்​களைப் போலவே மொழிக்​கும் சுயமரி​யாதை உண்​டு. சொல்​லப் போனால் மனிதர்​களின் சுயமரி​யாதையைக் காப்​பாற்ற மொழி தேவைப்​படு​கிறது. தமி​ழர்​களின் சுயமரி​யாதை தமிழ் மொழியோடு கட்​டுண்டு இருக்​கிறது. சேரன் செங்​குட்​டு​வன் இமயம் நோக்​கிப் படையெடுத்​துச் சென்ற போதும் ‘காவா நாவின் கனக​னும் விசய​னும் அருந்​தமிழ் ஆற்​றல் அறிந்​திலர்’ என்று கூறிய​தாகச் சிலப்​ப​தி​காரம் சொல்​கிறது. எனவே, மொழி அரசி​யல் இல்​லாமல் தமிழக அரசி​யல் இருக்க வாய்ப்​பில்​லை.

மொழி அரசியலை திமுக பேசுமளவுக்கு அதிமுக பேசவில்லை… இருந்தாலும் அந்தக் கட்சியையும் மக்கள் ஆதரிக்கத்தானே செய்கிறார்கள்?

அதி​முக-வை​யும் இந்​திக்கு ஆதர​வாக வெளிப்​படை​யாகப் பேசத் தமி​ழ​கம் அனு​ம​திப்​ப​தில்​லை​தானே.

கருணாநிதிக்குப் பிறகு தமிழ் சார்ந்து சிந்திக்கும், பேசும் அரசியல் தலைவர்களுக்குத் தமிழகத்தில் பஞ்சமாகிவிட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பேசும் அரசி​யல் தலை​வர்​கள் குறை​வாகத் தெரிய​லாம். ஆனால், செயற்​பாடு​களில் தீவிரம் குறைய​வில்​லை​தானே.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *