சென்னையில் 49 வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக வெளியீட்டு நிகழ்வுகளும், எழுத்தாளர்களின் வருகையும்… வாசகர்களின் புத்தக நுகர்வும் புத்தகக் காட்சிக்கு வலுசேர்க்கின்றன. அந்த வகையில் எழுத்தாளரும் மொழி அறிஞருருமான மகுடேஸ்வரன், பிற மொழி கலப்பில்லாமல் மொழியைக் கையாள வேண்டியதன் தேவை குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
“மொழி என்பது தனித்து இயங்குவது. ஒவ்வொன்றும் ஒரு மொழி. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு செரிமான அமைப்பு உள்ளது. மொழி என்பது பண்பாட்டுச் சொத்து. குறிப்பாக தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டுகள் பழைமையானது. இதுவரை தனித்து நின்றே இவ்வளவு தூரம் பயணித்துள்ளது.
இதன் தனித்தன்மையைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செல்வதுதான் உங்கள் கடமை. மொழியைக் கலப்பு செய்தோ, சிதைத்தோ பிற மொழிகளின் ஆதிக்கத்தை உள் இழுத்துக் கொண்டோ அடுத்த தலைமுறைக்கு இந்த மொழியை விட்டுச் செல்லலாமா? இது எப்படி ஓர் அறிவுடைமை ஆகும்? மொழியின் எல்லா நுண்ணியக்கூறுகளும் காப்பாற்றப்பட வேண்டிய உலகத்திற்குத்தான் நாம் செல்ல வேண்டும்.
தமிழர்களின் கடமை என்னவென்றால் அழகான, அரிதான, தனித்தன்மைமிக்க, காப்பாற்றப்பட வேண்டிய, எல்லா தொன்மைகளையும் நாம் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும். முன்பு தமிழ் மொழி வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியது. தற்போது தொழில்நுட்ப யுகத்தில் குறிப்பாக வாட்ஸ் அப்பில் தங்கிலீஷுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது.