கரூர்: மோசடி வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (43). கரூர் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். ஆன்லைன் முதலீடு தொடர்பாக இணையதளத்தில் தேடியப்போது சென்னையை சேர்ந்த விக்னேஷ் அறிமுகமாகியுள்ளார். அன்லைன் முதலீட்டுக்காக கடந்தாண்டு அக்டோபர் 16-ம் தேதி அவரிடம் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார். 2, 3 மாதங்களில் லாபத்துடன் பணத்தை தருவதாக கூறியிருந்தவர், அதன் பிறகு போனில் தொடர்பு கொண்டபோது தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 5-ம் தேதி விக்னேஷ் கரூர் வருவது குறித்து அறிந்து கிருஷ்ணன் அங்கு சென்றபோது ஆபாசமாக திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டி, கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் கிருஷ்ணன். கரூர் நகர காவல் நிலையத்தில் அவர் கடந்த ஜூன் அளித்த புகாரில் விக்னேஷ் மீது மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். விக்னேஷ், யுடியூபர் சவுக்கு சங்கரிடம் பணியாற்றியவர் என்றும், அவர் அந்த பணத்தை சவுக்கு சங்கரிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து இவ்வழக்கில் அவரை 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இவ்வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக சவுக்கு சங்கரை புழல் சிறையில் இருந்து நேற்று திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வந்து அங்கிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கரூர் கிளை சிறைக்கு அழைத்து வந்து அடைத்தனர்.
அதன்பின் காலை 11 மணிக்கு கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தினர். சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கரூர் நகர போலீஸார் அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி 4 நாட்கள் வழங்கி அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து, சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கரிகாலன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “அவருக்கும் இந்த வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. வழக்கில் அவர் பெயரே இல்லை. இவ்வழக்கில் புகார் தெரிவித்தவர் அளித்த வாக்கு மூலத்தில் இவரை இணைத்துள்ளனர். அவர் சில நிகழ்வுகளை என்னிடம் கூறியுள்ளார்.
சென்னை புழல் சிறையில் அவர் மிகவும் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளார். ஐஜி கனகராஜ் அவரை சித்ரவதைக்கு உள்ளாக்கி வருகிறார். அவருக்கு கை உடைந்துள்ளது. அந்த கட்டை அவிழ்க்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதில்லை. அவருக்கு நீரிழிவு நோயாளிக்கான உணவு வழங்குவதில்லை. வழக்கறிஞர்கள் சந்திக்க சென்றால் தனியே சந்திக்க அனுமதிப்பதில்லை.
அதே புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துமவனையில் இருப்பதால் சவுக்கு சங்கரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில்லை. புழல் சிறையை செந்தில் பாலாஜி விருந்தினர் மாளிகை போல பயன்படுத்தி வருகிறார். அவருக்கு செல்போன் வழங்கப்பட்டுள்ளது இதை வைத்து அவர் மாவட்டத்தையே கட்டுப்படுத்தி வருகிறார். 6 மணிக்கு சிறையில் உள்ளவர்களை அடை த்து வைத்துவிட்டு செந்தில் பாலாஜியை நடைபயிற்சிக்கு அனுமதிக்கின்றனர்” என்று அவர் கூறினார்.