மோடியின் இஸ்ரேல் உரை: `இந்தியாவின் கௌரவத்தைக் குறைப்பது போல் உள்ளது' – காங்கிரஸ் கடும் சாடல்

Spread the love

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை (பிப்ரவரி 25) இஸ்ரேல் சென்றார். பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், அவரின் மனைவியும் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை புழந்து உரையாற்றினார் நெதன்யாகு. அவருக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, இஸ்ரேலுடன் இந்தியா உறுதியாக நிற்பதாகவும், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்றும் குறிப்பிட்ட அவர், அந்தத் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மோடி - இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு
இந்தியப் பிரதமர் மோடி – இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு

பயங்கரவாதத்தை எந்தக் காரணமும் நியாயப்படுத்த முடியாது என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, காசா அமைதி முயற்சிகள் இப்பிராந்தியத்தில் ஒரு நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், `இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்த தினத்தில்தான் நான் பிறந்தேன்’ எனவும் பெருமிதமாகக் கூறினார்.

இந்த நிலையில், பிரதமரின் போக்கைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தன் நண்பர் நெதன்யாகுவை ஒருதலைபட்சமாகப் புகழ்ந்து பேசியிருக்கிறார். தான் பிறந்த அன்றே இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்ததாக ஒரு பெருமிதத்தோடு அவர் பேசினார்.

ஆனால், அன்று இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் எவ்வளவு முதிர்ச்சியோடு சிந்தித்தார் தெரியுமா? உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் 1947-லேயே இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவு கேட்டு நேருவுக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் எழுதிய நேரு, ‘யூதர்கள் மீது எனக்குப் பரிதாபம் இருக்கிறது, ஆனால் அதே சமயம் அரேபிய மக்கள் (பாலஸ்தீனம்) படும் துன்பமும் என் கண்ணுக்குத் தெரிகிறது. ஒரு தரப்பை மட்டும் ஆதரிக்காமல், இரு தரப்புக்கும் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்’ என்று நடுநிலையோடு கூறினார்.

பிரதமர் மோடி இப்போது ஒரு தரப்பை மட்டும் வெட்கமின்றி ஆதரித்துப் பேசுவது, இந்தியா காலம் காலமாகப் பின்பற்றி வந்த அந்த நடுநிலையான கௌரவத்தைக் குறைப்பது போல இருக்கிறது” எனப் பதிவிட்டு பிரதமர் நேரு எழுதிய கடிதங்கள் படங்களைப் பகிர்ந்திருந்தார்.

ஜவஹர்லால் நேரு 1947-ல் பாலஸ்தீனப் பிரச்சினை குறித்து ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதத்தின் சாரம்சம்:

இந்தியா யூத மக்களின் துயரங்களுக்கும், நாஜிக்களின் கொடுமைகளுக்கும் ஆழமான அனுதாபம் கொண்டுள்ளது. யூதர்களின் இனவாதக் கொள்கையையும், அரபு மக்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இரு தரப்புக்கும் நியாயமான தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. வன்முறை தீர்வு அல்ல, ஒத்துழைப்புடன் கூடிய அமைதியான தீர்வே சாத்தியம். மூன்றாம் தரப்பு ஆதிக்கம் இருக்கக் கூடாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *