`மோடியைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!' – ஓம் பிர்லா

Spread the love

இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறுத்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதில் தொடங்கியது பிரச்னை. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி-க்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டதாக புகார் எழுந்திருக்கிறது.

ஓம்.பிர்லா
ஓம்.பிர்லா

நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார். அவர், 5 மணிக்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எட்டு அல்லது ஒன்பது பெண் எம்.பி.க்கள் மக்களவையில் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து, “சரியானதைச் செய்யுங்கள்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து அவையில் நடந்த அமளியால், பிரதமர் மோடி உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார்.

இது தொடர்பாக இன்று விளக்கமளித்த சபாநாயகர் ஓம்.பிர்லா, “பிரதமர் மோடி குடியரசுத் தலைவரின் உரைக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இந்த காட்சியை நான் நேற்று சபையிலேயே பார்த்தேன்.

நாடாளுமன்றத்திற்குள் நிலவும் குழப்பத்தால் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளைச் சிதைக்கும், விரும்பத்தகாத காட்சியாக இருந்திருக்கும். இதைத் தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன்” எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து பிரதமரின் உரை ரத்துசெய்யப்பட்டது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோந்தே பாட்டீல், “பிரதமர் நாடாளுமன்றத்தை எதிர்கொள்வதற்கு பயப்படுவதால்தான் அவரது உரை ரத்து செய்யப்பட்டது. அவர் எதார்த்தத்தைப் பார்த்து பயப்படுகிறார். அந்த நரவானே தான் ‘டராவனே’ (பயமுறுத்துபவர்) ஆகிவிட்டார் என்பதுதான் முக்கியக் காரணம். அதனால்தான் பிரதமர் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. கேள்வி கேட்பது தாக்குதல் அல்ல” என்றார்.

இதற்கிடையில், பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “காங்கிரஸின் உண்மையான முகம் இந்தியாவுக்கு எதிரானது, வன்முறைக்கு ஆதரவானது. நக்சல்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஜனநாயகத்தின் போர்வையில், அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிரான ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். அது ஆபத்தானது” என்றார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை மாநிலங்களவையில் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் இன்னும் தீவிரமாக இருப்பதால், அவரது மாநிலங்களவை வருகை எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய பா.ஜ.க முயற்சிக்கிறது. பிரதமரின் உரையின் போது எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய பாஜக எம்.பி.க்கள் சபையில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *