கர்நாடக காங்கிரஸ் மீதான பொய்க் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பிரதமர் அரசியலில் இருந்து விலக கர்நாடக முதல்வர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை (நவ. 16) சோலாப்பூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார். மேலும், கர்நாடக காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தான் பதவி விலகுவதாகவும் சவால் விடுத்தார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது, “பிரதமர் மோடி அப்பட்டமான பொய்களைத்தான் பேசுகிறார். காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளை அவர் நிரூபித்தால், நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன். ஆனால், நான் சொல்வது சரிதான் என்றால், அவர்கள் மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கேட்டு அரசியலில் இருந்து விலகுவார்களா? எனது சவாலை மோடி ஏன் ஏற்கவில்லை? அவருக்கு என்ன பயம்?
விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யாத பாஜக, தொழிலதிபர்களுக்கான ரூ. 16 லட்சம் கோடி கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது.
ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் கோடி மத்திய வரியாக செலுத்தினாலும், அதற்கு ஈடாக ரூ. 60,000 கோடி மட்டுமே கர்நாடகத்திற்கு வருகிறது; மகாராஷ்டிரத்திற்கும் ரூ. 8.78 லட்சம் கோடிக்கு ஈடாக ரூ. 1.3 லட்சம் கோடி மட்டுமே திரும்பப் பெறப்படுகிறது.
அதாவது, வரி செலுத்தப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கர்நாடகத்திற்கு 13 பைசாவும், மகாராஷ்டிரத்திற்கு 15 பைசாவும் மட்டுமே கிடைக்கிறது. இது கர்நாடகத்திற்கும் மகாராஷ்டிரத்திற்கும் பாஜக இழைக்கும் அப்பட்டமான அநீதி’’ என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் நவ. 14 ஆம் தேதியில் பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறியதாவது, கர்நாடக மக்களை ஏமாற்றி ஆட்சியமைக்கும் காங்கிரஸ், மாநில மக்களிடம் கொள்ளையடிக்கும் பணத்தை மகாராஷ்டிர தேர்தலுக்காக செலவழிக்கின்றனர். கர்நாடகத்தில் ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்படும் மோசடிகளின் மூலம், மக்களிடம் காங்கிரஸ் கொள்ளையடிப்பது தெளிவாகிறது’’ என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீர் ராஜிநாமா