'மோடி மேடையா… அறிவாலயமா?' – `டைலமா' பிரேமலதா; திக்…திக் தேமுதிக!

Spread the love

“பேரம் பேசுவதில் என்ன தப்பு?”

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, அ.தி.மு.க கொடுத்த ராஜ்ய சபா சீட் `அல்வா’ என அடுத்தடுத்த சறுக்கல்களால் சோர்ந்து போயிருந்தார், பிரேமலதா. “ஜனவரியில் கடலூர் மாநாட்டில் அதிரடி முடிவு வரும்” என அவர் கொடுத்த பில்டப், லட்சக்கணக்கான தொண்டர்களைக் கடலூரில் திரட்டியது.

கூட்டத்தில் மைக் பிடித்த சுதீஷ், “ஆமாம்… நாங்க பேரம் பேசுறோம். 10 லட்சம் தொண்டர்கள் இருக்கும்போது சீட்டுக்காகப் பேரம் பேசுவதில் என்ன தப்பு? தே.மு.தி.க யாருடன் இருக்கிறதோ அவங்கதான் ஆட்சி அமைப்பாங்க. அப்போது பொதுச்செயலாளர் துணை முதல்வராக வருவார்” என எகிற, தொண்டர்கள் உற்சாகமானார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், கிளைமாக்ஸில் பேசிய பிரேமலதாவோ, “மத்திய, மாநில ஆளும் கட்சிகளே இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்காதபோது நாம் ஏன் அவசரப்பட வேண்டும்?” எனச் சொல்லி ஒட்டுமொத்த எதிர்பார்ப்பிலும் மண்ணைப் போட்டார்.

குடும்பத்துக்குள் குஸ்தி?

இதற்கு, “கடந்த முறை ராஜ்ய சபா சீட் தருவதாகச் சொல்லி ஏமாற்றிய அ.தி.மு.க-வை நம்ப வேண்டாம். தி.மு.க பக்கம் போனால் நிச்சயம் சட்டமன்றத்துக்குள் நுழையலாம் என்பது மாவட்டச் செயலாளர்களின் ஒட்டுமொத்த கருத்து.

ஆனால் விருதுநகர் தோல்வியை இன்னும் மறக்காத விஜயபிரபாகரன், தி.மு.க கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்றிருக்கிறார். இதற்கிடையில் வெற்றி வாய்ப்பு தி.மு.க பக்கமே இருப்பதால், அங்கு செல்வதே புத்திசாலித்தனம் என சுதீஷ் நினைத்திருக்கிறார். இதனால்தான் பிரேமலதாவால் அப்போது முடிவு எடுக்க முடியவில்லை” என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

விஜயபிரபாகரன்

இதற்கிடையில்தான், தே.ஜ கூட்டணியைப் பலப்படுத்தும் வேலைகளைத் தீவிரமாகக் கையில் எடுத்தது பா.ஜ.க தலைமை. இதையடுத்துதான் முரண்டு பிடித்த அன்புமணி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டனர். பியூஸ் கோயல் தரப்பு பிரேமலதாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பிரேமலதா கலந்துகொள்வார் என்று ஒரு தரப்பு சொன்னாலும், ரகசியமாக ‘அறிவாலய’ டீலிங் முடிந்துவிட்டதாகத் தகவல்களும் கசிகின்றன.

இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?

இது குறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “எ.வ.வேலு நடத்திய பேச்சுவார்த்தையில், ’12 சீட், ஒரு ராஜ்ய சபா’ எனப் பேரம் பேசியது தே.மு.தி.க. ஆனால் அறிவாலயம் 6-க்கு மேல் தர முடியாது எனக் கையை விரித்துவிட்டது. அ.தி.மு.க-விடமும் 18 சீட் கேட்டு ‘நோ’ சொல்லப்பட்டது.

விஜய்யின் த.வெ.க-வில் சீட் கிடைக்குமே தவிர, ‘தேர்தல் செலவு’க்கு வழி இருக்காது என்பதால், அந்த ஆப்ஷனையும் பிரேமலதா தள்ளி வைத்துவிட்டார். இந்த நிலையில்தான் தி.மு.க தரப்பிலிருந்து ‘பாசிட்டிவ்’ சிக்னல் கிடைத்திருக்கிறது.

அண்ணா அறிவாலயம்

இதையடுத்து, `அ.தி.மு.க பக்கம் போனால் வெற்றி சந்தேகம். தி.மு.க பக்கம் போனால் நிச்சயம் எம்.எல்.ஏ-க்கள் ஆகலாம்’ எனக் கணக்கு போட்டிருக்கிறார், அண்ணி. இருந்தாலும், கடைசி நிமிடம்வரை பேரம் பேசி அதிகப்படியான பலனைப் பெற வேண்டும் என்பதே தே.மு.தி.க-வின் தந்திரம். எனவே, நாளை மோடி மேடைக்குப் பிரேமலதா செல்வாரா அல்லது அறிவாலயம் நோக்கி வண்டியைத் திருப்புவாரா? என ‘கேப்டன்’ கட்சித் தொண்டர்கள் திக்திக் நிமிடங்களில் காத்திருக்கிறார்கள்!” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *