கோவை: திருச்சி எஸ்.பி வருண்குமார் விவகாரத்தில், “மோதுவோம் என்றாகிவிட்டது; மோதிப் பார்ப்போம்” என கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கலந்துரையாடல் கூட்டம் கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (டிச.5) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது குறித்து கேட்கிறீர்கள், மக்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பதை எப்படி குறை சொல்ல முடியும். குறை சொல்லிக் கொண்டே இருப்பதற்கு நாங்கள் என்ன மன நோயாளியா?. சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு.
நாம் தமிழர் கட்சி இந்திய அரசியலமைப்பின் படி பதிவு செய்யப்பட்ட கட்சி. 13 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மக்களை சந்தித்து தேர்தலில் நின்று வருகிறோம். தனித்து நின்று போட்டி போட்டு 36 லட்சம் வாக்குகள் பெற்ற கட்சியை, பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் எனக் கூறினால், இவர் தான் (வருண்குமார் ஐபிஎஸ்) நாட்டை ஆளுகின்றாரா?. தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தபோது, பிரிவினைவாத இயக்கம் என்பது தெரியாதா? அடிப்படை தகுதியே இல்லாமல் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனாய்? உண்மையில் உன்னுடைய தாய் மொழி எது? தமிழ்த் தாய்க்கு, தந்தைக்கும் பிறந்திருந்தால் தமிழ் தீவிரவாதிகள் என்ற வார்த்தை சொல்லி இருப்பாயா?
உனக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கிறதா? என்னை, என் குடும்பத்தினரை இழிவாக பேசியதற்கு வழக்கு போடுவாயா? இந்த காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய்? ஒரு 50 வருடம், அதன் பின்னர் இறங்கி தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயே தான் இருப்போம். பார்த்து பேச வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றவர்கள் துவக்கி வைத்த நிகழ்வில், அவர்கள் பேசியது வெளியே வராமல், இவர் பேசிய காட்சிகள் மட்டும் ஊடகத்திற்கு வருவது எப்படி? என் கட்சியை குறை சொல்வதற்காக ஐபிஎஸ் ஆனாயா?. மோதுவோம் என்றாகி விட்டது வா போதுவோம்.
ஃபெஞ்சல் புயல் மட்டுமல்ல, எந்த புயலுக்கும் மத்திய அரசு வராது. தமிழக அரசு வரியை தர முடியாது என்று மத்திய அரசிடம் சொல்ல முடியுமா? முடியாதா? மாநில அரசுகளிடமிருந்து வாங்கும் வரிதான் மத்திய அரசிடம் இருக்கிறது. பேரிடர் காலங்களில் கூட உதவவில்லை என்றால் அந்த பணம் எதற்கு? பிஹார், குஜராத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்கிய போது, மற்ற இடங்களுக்கு கொடுப்பதில்லை. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுகிறது. உணவை முதலில் உறுதி செய். அதன் பின்னர், என்ன சாப்பிட வேண்டும் என சொல். மாட்டுக்கறியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது” என்று அவர் கூறினார்.