புதுச்சேரி: மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி பிராந்தியமான ஆந்திரம் அருகே உள்ள ஏனாமில் இன்று பகல் 12 மணி முதல் கடைகளை முழுவதும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் மண்டல நிர்வாகி அங்கீத் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், “மோந்தா புயல் இன்று இரவு ஏனாம் மற்றும் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். வரும் 30-ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அவசர கால பணிகளில் ஈடுபட போதிய எண்ணிக்கையிலான ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மரம் வெட்டும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
புயலை கருத்தில் கொண்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும். தேவைப்பட்டால் ஜிப்மர் மையமும் தயாராக இருக்கும். மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற கடைகள் அனைத்தும் இன்று மதியம் 12 மணி முதல் மூடப்படும். குடிநீர் விநியோகத்துக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் போது பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம். வீட்டுக்குள் இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் மளிகை மற்றும் மருந்துகள் தண்ணீர் ஆகிவற்றை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களை அணுக வேண்டும். அவசர காலத்திற்காக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. 0884-2321223, 2323200 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.