மோந்தா புயல் தாக்கம்: வட தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை? | Heavy rain warning for Chennai, Tiruvallur, Ranipet impact of Cyclone Montha

Spread the love

சென்னை: வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலான ‘மோந்தா’ (Cyclone Montha) அக்டோபர் 28-ம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே 970 கிமீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 990 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27-ம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ம் தேதி வாக்கில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும்.

அதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப் புயலாக 28-ம் தேதி மாலை அல்லது இரவில் கடக்கக்கூடும். அந்த நேரத்தில், காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்திலும், இடையிடையே 110 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

இதன் காரணமாக நாளை முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நாளை (அக்.26) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும். புதுச்சேரியிலிலும் கனமழை பெய்யக்கூடும். 27-ம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 28-ம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.25) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை (அக்.25) முதல் அக்.29-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 14 செமீ, நாலுமுக்கில் 13 செமீ, காக்காச்சியில் 11 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோரில் 9 செமீ, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 9 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் 8 செமீ, மதுரை மாவட்டம் இடையப்பட்டி, மதுரை மாநகரம், தள்ளாகுளம், கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *