ம.பி: 145 வழக்குகளில், 6 பேரை மீண்டும் மீண்டும் அரசு சாட்சிகளாக நிறுத்திய காவலர் – சாட்சி மோசடி

Spread the love

மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸார் வழக்குகளில் அரசு சாட்சிகளை சேர்ப்பதில் மோசடியில் ஈடுபட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுவாக வழக்குகளில் அரசு சார்பாக சாட்சி சொல்ல யாரும் வரமாட்டார்கள். இது போன்று வழக்குகளில் சாட்சிகள் கிடைக்காமல் ஏற்கனவே இருக்கும் வழக்குகளில் அரசு சாட்சியாக இருப்பவர்களை அவர்களுக்கே தெரியாமலேயே அவர்களது பெயர்களை வழக்குகளில் போலீஸார் சாட்சியாக சேர்த்துள்ளனர்.

அங்குள்ள மௌகஞ்ச் மாவட்டத்தில்தான் இந்த மோசடி நடந்துள்ளது. லௌர் மற்றும் நைகதி போலீஸ் நிலையத்தில் இந்த மோசடி நடந்திருப்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் குற்ற பதிவேடுகளை ஆய்வு செய்தபோது இந்த இரண்டு போலீஸ் நிலையத்திலும் பதிவான 100க்கும் அதிகமான வழக்குகளில் வெறும் 6 பேர் பொதுவான அரசு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நைகடி மற்றும் லௌர் காவல் நிலையங்களின் பொறுப்பு அதிகாரியாக ஜகதீஷ் சிங் தாக்கூர் இருந்தபோது இது போன்று நடந்துள்ளது.

இவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து 150-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய வழக்குகளை பதிவு செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் இவர் மீது புகார் அளித்துள்ளார். இரண்டு காவல் நிலையங்களிலும் இவர் பொறுப்பில் இருந்தபோது, ​​காவல்துறை நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும், வழக்குகளை நியாயப்படுத்துவதற்கும், ஊழலுக்கு வழிவகுப்பதற்கும், தனக்குச் சாதகமான நபர்களை மீண்டும் மீண்டும் சாட்சிகளாக சேர்த்துள்ளார் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான வழக்குகளில் சாட்சியாகக் குறிப்பிடப்பட்ட ஆறு நபர்களில் ஒருவரான அமித் குஷ்வாஹா, தாக்கூர் எங்கெல்லாம் இடமாற்றம் செய்யப்படுகிறாரோ அங்கெல்லாம் அவருடன் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் குஞ்ச் பிஹாரி திவாரி, முதலில் 2022-ல் தாக்கூருக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர், கடந்த டிசம்பரில், ‘ஆதாரங்களுடன்’ மற்றொரு விரிவான புகாரை அவர் தாக்கல் செய்துள்ளார்.

இப்புகார்களை தொடர்ந்து தாக்கூர் நைகதி போலீஸ் நிலைய பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் தாக்கூர் மீதான புகார் குறித்து விரிவாக விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி திலிப் சோனி தெரிவித்துள்ளார். மொத்தம் 145 வழக்குகளில் பொதுவான சாட்சிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக திலிப் சோனி தெரிவித்துள்ளார். 6 சாட்சிகளில்’ சிலர் இப்போது காவல்துறையின் நடவடிக்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளனர். சாட்சிகளில் ஒருவரும் காய்கறி வியாபாரியான தினேஷ் குஷ்வாஹா இது குறித்து கூறுகையில், “நான் நேரில் ஒன்று அல்லது இரண்டு வழக்குகளில் மட்டுமே சாட்சியாகக் கையெழுத்திட்டேன்.

மற்ற பல வழக்குகளில் நான் சாட்சியாக இல்லை. எனக்குத் தெரியாமலேயே காவல்துறை என் பெயரை சாட்சியாகப் பதிவு செய்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார். போலீஸாரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *