`யம்மா… தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை எங்கே?’- தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

Spread the love

சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை கண்டித்தும் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு பேசினார்.

தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழிசை சௌந்தர்ராஜன்

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அதை கண்டிக்க வேண்டிய கட்சிகள் தி.மு.க-வுடன் கைகோத்து நிற்கின்றன. `பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்” என்று சொல்லும் துணிச்சல் அந்த கூட்டணியில் உள்ள யாருக்காவது இருக்கிறதா? கொடுப்பதைக் கொடுங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று இருக்கிறார்கள். அதை விடவும், அண்ணா அறிவாலயம் பக்கத்தில் யாராவது நிழலுக்காக ஒருங்கினால்கூட, ‘கூட்டணிக்கு வாங்க’ என்று அழைக்கும் அவல நிலையில் தி.மு.க இருக்கிறது” என்று தமிழிசை பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் சத்தமாக, “யம்மா ஒரு நிமிஷம்… தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை எங்கே? சென்ட்ரல் கவெர்மென்ட் வேலை எங்கே?” என்று தமிழிசையை நோக்கி கேள்வி எழுப்பினார். அதைக் கேட்காததுபோல தமிழிசை சௌந்தர்ராஜன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெண்மணி விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலரது கவனமும் அவர் பக்கமாகத் திரும்பியது. அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த அ.தி.மு.க ஆண் நிர்வாகிகள் சிலர், அந்த மூதாட்டியை கூட்டத்தை விட்டு அப்புறப்படுத்தும் நோக்கத்தில் தள்ளினார்கள். ஆனால் அவரோ விடாமல் தனது கேள்வியை தமிழிசை நோக்கி முன்வைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *