யாதுமாகிய பெண்ணோவியமே! – சிறுகதை

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பெண்ணே!  ஆதியும்   அந்தமுமானவள்

நீயெனில்..

பெண்ணே! வினாவும்  விடையுமானவள்

நீயெனில்.. 

பெண்ணே! கருணையும்  காருணியமும்

நீயெனில்…

பெண்ணே!  வீரமும்    துணிவும் 

நீயெனில்..

பொங்கி  பிரவகமெடுக்கும்  நதியெல்லாம்  நீயெனில்…

துளிர்க்கும்  தளிர்களின்   விதைகளும் 

நீயெனில்…

இயற்கை  நியதியின்  உருவெல்லாம் 

நீயெனில்..

யாதுமாகி  பிரபஞ்சத்தை  வியாபித்தவள் நீயெனில்

யாவற்றையும்  எல்லாருக்கும்  தருபவள்

நீயெனில்…

பெண்ணே!சுதந்திரமே   நீயில்லையா??

சுதந்திரத்தை   யாரிடம்   பெறவேண்டும்

உன்னிடத்தில் இருந்து  உனக்கே

சுதந்திரம்    வேண்டுமா  பெண்ணே…!!!!

கருத்துபோய்  இப்போ பொழியலாமா!!இல்லை  கொஞ்ச நேரம்  கழித்து  பொழியலாமா!!இல்லை  போக்கு  காட்டிவிட்டு   கலைந்து   போகலாமா    என்று  யோசனையாய்  இருந்த  கார்மேகத்தை. ஜன்னல்  வழியே   வெறித்து  கொண்டிருந்தாள்  குமுதினி…

கார்மேகமும்  இவளை   உன்னித்ததோ என்னவோ…!என்ன இவள் நமது   மொத்த கருவண்ணத்தை   வாங்கியது போல, முகம் இப்படி கருத்துப்போய் .. வேதனையில் வெம்பி போய்  நம்மை  முறைக்கிறாளோ??? என  நோக்க…

அதன் வண்ணத்தை  குமுதினி  மனதில் வாங்கினாளோ? இல்லை  இவளின்  துயரை உணர்ந்த கருமேகம்   கவலையில்   கருத்ததோ?? எதுவோ ஒன்று ..அந்த  தர்க்கம்  நமக்கு  இப்போ  தேவையில்லை….இதோ இங்கே விரக்தியின்  விளிம்பில்   அமர்ந்து இருக்காளே  குமுதினி   அவளின்   நிலையை  கொஞ்சம் பார்ப்போம்…

“வீலென்று ”   கத்திய   குழந்தையின்  அழுகையில்  சற்றே  கவனம் சிதறி    குழந்தையை   நோக்கியவள்    அதனை கைகளில்   ஏந்தாமலே   மௌனமாய் வெறித்து  பார்த்தாள்  குமுதினி…

குழந்தையின் அழுகை   செண்பகத்தின்  தூக்கத்தை   விரட்ட… கண்இமைகளை   சிரமபட்டு  பிரித்தாள்… பாவம் அவளும் தான் என் செய்வாள்  ஒருமதமாய்   மகள் கூடவே  தனி ஒருத்தியாய்  அல்லாடுகிறாள்…

“ஏட்டி குமுதினி   குழந்தை இந்த கத்து கத்துறாளே… உன் காதில் விழலையா?? அப்படியென்னடி சிந்தனை” என கேட்க…

பதில் சொல்லாமல் விட்டோத்தியாய்  பார்த்த  மகளின்  நிலையை   பார்த்தவள்.. எழுந்து  குழந்தையை   தூக்கி  குமுதினி   கைகளில்   கொடுக்க எத்தனித்தாள்…

“இந்தா   குமுது   கொஞ்சம் பால் கொடுத்து  பசியாத்து”   என்க…  ஏதோ மறுப்பு  சொல்ல  வந்தவள்,அந்நேரம்  நர்ஸ் ராணி   கதவை தட்டி   உள்ளே வரவும்   பேசாமல்  குழந்தையை   வாங்கி சிரமத்துடன்   அமர்ந்தே   பால் கொடுக்க தொடங்கினாள்…

குமுதினிக்கு  ராணி சிஸ்டர்  என்றாலே  பயம்… அவள் இங்கே அட்மிட்  ஆன  நாள்முதல்  ராணி தான் அதிகம் அவளை கவனித்து கொள்வது.. குமுதினியை அதிகம் உடம்பு அலட்டாமல்  பார்த்துகொள்வதில்  இருந்து, என்னென்ன செய்ய வேண்டும்.. எது எது செய்யகூடாது  என்பது வரை… கொஞ்சம் சிடுசிடுத்த முகத்தோடு சட்டு சட்டுனு வரும்கோபதோடும்   ஹாஸ்பிடல் முழுவதும்   வலம்வருபவள்.. ஏதாவது குமுதினி   தவறாக செய்தால்  திட்டுவதும்.. உங்க உடம்பு நல்லதுக்கு சொல்கிறோம்.. இத்தனை செய்வது எதுக்கு வீணா போகவா  என பொரியும் போது   யாரும் பதில் பேச முடியாது.. குழந்தைகளை   பேணிபராமரிப்பதில்..சிசுவின் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம் சொல்லும்  அளவிற்கு  கைத்தேர்ந்த அனுபவம்   மிக்கவளும்  கூட..டாக்டர் அம்மாவின்  நம்பிக்கைக்கு   உரிய.. ஹாஸ்பிடலின்  தலைமை  தாதியும்   கூட..

குழந்தை பிறந்து  மூன்று நாட்கள் ஆகி இருந்தது… இன்னும் ஹாஸ்பிடல் விட்டு செல்ல வில்லை… சிசேரியன் தான் செய்து இருந்தனர்…

“ஏன் குழந்தையை இப்படி கத்த விடுறீங்க… இவள் பிறப்பதற்குள் எத்தனை சிரமபட்டாய்  என்பது  மறந்து போச்சா”   ராணி   கடிந்து கொள்ள…

“இல்லமா,, பசிக்கு அழுதாள்  பிள்ளையாள சட்டுனு எந்திரிக்க முடியல.. அதான் நான் எழுந்து எடுத்து கொடுத்தேன் “என  செண்பகம் சமாதானம் சொல்ல..

“சரி, சரி” யென்று  அவளின் வழக்கமான   பரிசோதனைகளை  செய்து செல்ல..

குழந்தை பால்குடித்த  களைப்பில்  கொஞ்சம்  ஆசுவாசம்   கொள்ள…

மகளின்  நிலை பார்த்து மனம் கரைந்த செண்பகம் ,, “ஏம்மா குமுது  ஏன் இப்படி இருக்க.. குழந்தை பிறந்த சந்தோசம்   கொஞ்சம் கூட  உன் முகத்தில் இல்லையேடி?? இதுக்குக்காக  எத்தனை சிரமம் பட்ட” என  ஆதூரமாய்  மகளின் தலையை   வருட…

“அதான் மா  தப்பு பண்ணிடோமான்னு  கவலையா  இருக்கு.. பேசாம நான் குழந்தை இல்லாமலே  இருந்து இருக்கலாமோனு  தோணுது மா …நானும் எவ்ளோதான்  சொல்லி பார்த்தேன்  உங்களுக்கு.. எத்தனையோ   திட்டுக்கள், கிண்டல் கேலிகள்  கேட்டாச்சு பிள்ளை இல்லைனு… இனி ஜான் போனால் என்ன?? முழம் போனால் என்ன… மலடி  என்ற பேரோடு இருந்துட்டு போறேன்..

“ச்சி பைத்தியம்  என்ன பேச்சு இது,,” செண்பகம் திட்ட…

“பின்ன என்னமா?  சொல்ல சொல்லுற..ஒன்பது வருசமா  பிள்ளை இல்லாமல் இருந்து.. இப்போ  ” செயற்கை  கருவூட்டல்   மூலமா   கரு தங்கி “என்னை பொம்மையா   உக்கார வச்சி, சேவகம் பண்ணி   நீயும் உருகுலைஞ்சு போய் நிக்கிற..பிள்ளைகள் வேணுன்னு நீயும் மூணு குழந்தைகள் பெத்த.. இப்போ என்னத்த  சாதிச்ச.. என்னையும் உருப்படியா படிக்க வைக்க முடியல.. தங்கச்சியும்  12வதோட  சரி… தம்பிய பணம் இல்லன்னு ரெண்டு வருஷம் இடைவெளி விட்டு இப்போதான்  கொண்டுபோய்  பால்டெக்னிக்  சேர்த்து இருக்க.

இதில முக்கிய கடமைனு  நான் மறுக்க மறுக்க இப்படி ஒரு மாப்பிள்ளைக்கு  கல்யாணத்த  பண்ணிவச்சு, என்னோட நிம்மதி  மட்டும் நீயும் நிம்மதி இழந்து  நிக்கிற.. இதோடு குழந்தை வேணும்னு எத்தனை  ஹாஸ்பிடல் ஏறி இறங்கி  இருப்போம்  ஏழு   வருசமா எவ்ளோ செலவு  பண்ணி.. இதோ  இப்போ இங்க இருக்கோம்..கருத்தரிப்பு  சிகிச்சைக்கே  நம்மோட  மொத்த சொத்தும் போச்சு… அதோட  போச்சா.. நம்ம வீட்டில் என்னை வச்சு தாங்கின… புருஷன் வீட்டிலும் ஒருவாரம்  இருந்துட்டு வான்னு  கூப்பிட்டுகிட்டே இருக்காங்கன்னு அனுப்பி வச்ச..அங்க போய்  என்னை வேலை செய்ய வச்சாங்க..விளைவு ஏழாம் மாசமே  பிரச்சனை கருப்பைவால்வு  ஒபன் ஆகிடுச்சு னு     ஹாஸ்பிடல் வந்தாச்சு..ஒருமாசம்  ஹாஸ்பிடல் வாசம்… ஆடகூடாது, அசைய கூடாது னு சொல்லிடாங்க…ஒருநாளைக்கு  மூவயிரம்  ரூபாய்  செலவாச்சு…அதுக்கே  மாசத்துக்கு  லட்சரூபாய் செலவு…அதுக்கும்   நீதான் எவ்ளோ  கஷ்டபட்டே… உதவிக்கு  கூட  ஆள் இல்லமா  இரவும் பகலும்,,   இப்போ  பிரசவ செலவு வேற   ஒரு லட்சத்துக்கு  மேல போகும்…

“வாரிசு வேணுன்னு  ஆசைப்பட்ட  புருஷன்… ஏதோ   பேருக்கு   கொஞ்சம் பணம்    கொடுத்து    நான்தான்  செலவு செய்தேன்  யென்று   பெருமைபீத்தல் வேற  உறவுகளிடமும்    நட்புகளிடமும்.. நல்ல வேலையில்  இருந்தும் , குடிச்சே  அழிக்கிறார்  முக்கால்வாசி   சம்பளத்தை… இதுல பொம்பளபுள்ளையா  போச்சுன்னு  வருத்தம்  வேற..”

அவளே தொடர்ந்து,

 “இப்போ சொல்லுமா!இதில்  மகிழ்ச்சி எங்கமா  வரும்?? இவளும் வளர்ந்து  என்னை  மாதிரி சின்னபட்டு போவளோன்னு மனசுக்குள்ள இப்பவே  பயமா இருக்குமா” யென்று  தனது   மனகுமுறலை   எல்லாம் வார்த்தைகளாய்   கொட்டியவள்   கண்கலங்க  தொடங்க…

விடுடா குமுது, இவள் பிறந்த நேரம்  நமக்கு ஏதேனும்   நல்லது  நடக்காதா?? அவங்க  அப்பாவும்  திருந்தவும் வாய்ப்பு வரும்… என மகளை   சமாதான படுத்தினாள்  செண்பகம்…

“என்னையவே  சமாதான  படுத்து… ஏம்மா இப்போ செலவு செய்யபணத்துக்கு என்ன பண்ண போற, எப்படியும் ரெண்டு லட்சத்துக்கு கிட்டத்தட்ட வருமே..” என குமுதினி  வேதனையோடு கேட்க..

“நம்ம வீட்டை  அடமானம் வைக்க ஏற்பாடு பண்ணசொல்லி  மாமா கிட்ட சொல்லியிருக்கேன் குமுது.. எப்படியும் செய்துடுவார் “என்றாள்  செண்பகம்..

“நம்ம  நடுத்தர  குடும்பதுக்கே  உண்டான   சாபகேடு   இதுதானே!!  ஏற்கனவே ஒரு குந்துமணி   தங்கம்   இல்லமா  வித்தாச்சு ஏம்மா  இப்போ  வீட்டையும் அடமானம் வச்சு எனக்கே செலவு செய்துட்டு, எனக்கு பின்னாடி  இன்னொருத்தி இருக்காளே அவளுக்கு என்ன செய்ய போற, படிச்சுட்டு இருக்கானே தம்பி  அவனுக்கு, காலை உடைச்சுட்டு  வீட்டோட இருக்காரே  அப்பா அவரை எப்படி கவனிக்க!!சொல்லுமா…இதில் எனக்கு  வாரிசு ஒண்ணுதான்  குறைச்சலா.. போம்மா போதும்  போதும்னு  இருக்கு  இந்த வாழ்க்கை,ஏன்டா பெண்ணாய்  பிறந்தோம்னு   வெறுப்பாய்  ஒரே இருக்கு..”

“அப்படி  எல்லாம்  சொல்லாத மா…எப்பாடு பட்டேனும்  செய்ய வேண்டிய  கடனை செய்துதானே   ஆகவேண்டும்  குமுது   இப்போ உள்ள பிரச்சனையை  முடிப்போம்… சின்னவளுக்கும்  ஏதாவது வழிகாட்டுவான் ஆண்டவன்..தம்பிய பத்தி கவலைப்பட   ஒன்னும் இல்லை.. அவன் வாழ்க்கையை  அவன் பார்த்துப்பான்..” ஆறுதலுக்காய்   சொன்னாலும் மனதுக்குள்  உடைந்து தான் போனாள் செண்பகம்.. வரும்கால   வாழ்க்கையை   நினைத்து  பயத்தோடு.. பின்ன ஏற்கனவே   கடன்பிரச்சனையால்  சொந்தகிராமத்தில்  நிலத்தை விற்றுவிட்டு, பெங்களூருக்கு  ஓடியாச்சு…கிராமத்தில் ஒரு சிறு ஓட்டுவீடு  மட்டுமே  மிச்சம்…

பெங்களூரு வில், செண்பகம் இருவீடுகளில்   வீட்டுவேலை  செய்கிறாள்…சின்னவளோ  ஏதோ அழகு பயிற்சி  நிலையத்தில்  வேலைக்கு செல்ல.. இப்படிதான்  இவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது.. நிலம் விற்ற காசில் மீதமும், குமுதினியின் கருத்தரிப்பு  வைத்தியதுக்கே  சரியாக போயிற்று.. இதையெல்லாம்  நினைத்து பார்த்த செண்பகம்  பெருமூச்சு  விட்டாள்…

கடைசி   வார்த்தைகளை   கேட்டபடியே  உள்ளே வந்த நர்ஸ் ராணி, “என்ன அம்மாவும்  பெண்ணும்  பேசிமுடிச்சாச்சா..என்னமா   குமுதா இப்படி அலுத்துகிறா.. இங்க வாழ்க்கை யாருக்கும் வசந்தத்தை  அள்ளி தரல… இங்க வேலை செய்கிற  நர்ஸ் முதல்,, ஆயாம்மா வரை  எல்லாருக்கும்  ஒரு கதையும் உண்டு… கஷ்டமும்  உண்டு இவங்களுக்கு உன்நிலைமை எவ்ளோ  பரவாயில்ல  தெரியுமா .. இவங்க  மனதில் வலியை  சுமந்தாலும்   சிரிச்சுகிட்டு,, உங்க கிட்ட  அன்பா நடந்துகிட்டு  வளைய வரல..தன் பணியை   செவ்வனே செய்யல.. கஷ்டத்தை   மட்டுமே  நினைச்சா   இங்க யாருமே   வாழமுடியாது..”

“இருந்தாலும் அக்கா என் புருஷன் மாதிரி   மோசம் யாரணும்   இருப்பாங்களா.. நீங்களே   பார்த்தீங்க இல்ல.. எத்தனை தடவை  வந்தார் .. ஒவ்வொரு முறை வரும் போதும்   எதையாவது   குறை சொல்லி   சண்டை போட்டுட்டு  கோவிச்சுட்டு   போறது   வேற..”குமுதினி புலம்ப..

 அவளையே சற்று நேரம் உறுத்து பார்த்த ராணி.. “இருக்காங்க மா.. உன் புருஷனை விடவும் மோசமா  கூட இருக்காங்க.. ஆனால் வெளில தெரியாது  ரெம்ப  நல்லவனா ? ஜெண்டில்மேனா  நடந்துக்குவாங்க.. ஆனால் பெண்கள் விஷயத்தில்  மனச்சாட்சியை   தொலைத்து  நடந்துக்குவாங்க  சிலபேர்.. உன்னை அவங்க செய்யும் கொடுமைக்கு  பணிந்து அடங்கி போக சொல்லல.. “கல்லானாலும் கணவன்   புல் ஆனாலும்   புருஷன்னு” பொறுத்து போக  சொல்லல… அவங்க நியாயம் தவறி நடக்கும் போது , உன் சுயமரியாதைக்கு   பங்கம்  வரும்போது.. தூக்கி ஏறிஞ்சுட்டு  உன் வழியை   பார்த்து நட.. நாம நினைச்சா  சாதிக்க முடியாதுனு எதுவுமே இல்லை..உங்க அம்மாவால் முடிந்ததை   அவங்க செய்தாங்க… அவங்களால்   முடியாததை   நீ  செய்..இந்த காலத்தில்  வாழ எவ்ளோ வழி இருக்கும் போது.. உம் புருஷனே  ஆதரவு தரலைனா கூட உன்னால் உன் குழந்தையை  வாழ வைக்க முடியாதா என்ன??யாரும் உன் குழந்தைக்கு  கோட்டையோ  ராஜாங்கமோ   கட்டிதர வேண்டாம்..

தன்னம்பிக்கையும், தைரியமும், நல்ல படிப்பும் கொடு..நாளை இவளோ    ஒரு   தொழில்  சாம்ராஜ்யத்தை   நிர்மாணிப்பா ..ஆயிரம் ஆண்களுக்கு   வேலையும்  கொடுப்பா, எவ்ளோ சலுகைகள் இருக்கு.. அதை சரியா  பயன்படுத்திக்க… சும்மா  நீ ஏன் பொண்ணா பிறந்தேன்னு  உங்களை நீங்களே   சிறுமை  படுத்திக்காதீங்க.. மத்தவங்க   வியக்கிற  மாதிரி   வாழ்ந்து   சாதித்தும்  காட்டணும்.. இதுதான்   நீங்க  பிறந்ததுக்கு   பலன்   என்றவள்  பரிசோதனைகளை  முடித்தவள், எல்லாம் சரியாதான் இருக்கு  நாளை மறுநாள் டாக்டர் உங்களை அனுப்பிவிடுவாங்கன்னு நினைக்கிறேன்.. தைரியமா   இருங்க, இப்படி ஒரு வார்த்தை மறுபடியும்  என்  காதில் விழக்கூடாது சரியா குமுதா.. ஒன்னு மட்டும்  நல்லா கேட்டுக்க..நீங்க குழந்தை பெத்துக்கிட்டு  இது ஏன் பிறந்துச்சுனு திட்டுற வேலை கூடாது.. எந்த நிலையிலும் பெற்ற குழந்தையை கைவிட கூடாது.. அவங்களுக்கு  உண்டானதை   கடமையை சரியாக செய்யணும்.இதில் எதுவுமே  முடியாது என்றால்  குழந்தை பெத்துக்கவே கூடாது” என்றாள்  ராணி முத்தாய்ப்பாக.

தெளிவான மனத்தோடு,மலர்ச்சியான  முகத்தோடு  “சரிங்க அக்கா” என்றாள் குமுதினி.. 

அவ்ளோநேரமும்  காதவோரம்   நின்று இருந்த  குமுதினியின்  கணவன் குகனேஷை  யாரோ  கன்னத்தில்   ஓங்கி  அறைந்தது போல்  உணர்ந்தவன், ராணியை பார்த்தான்  அவள் அவனை ஒரு பொருட்டாகவே  மதிக்க வில்லை,, ஏளனமாய்   ஒரு பார்வையை   வீசிசென்றாள்… தன்னை நினைத்து வெக்கித்து   போனவன்  உடம்பெல்லாம் கூச   கதவை  திறந்து   உள்ளே சென்றான்…

உள்ளே சென்று  குழந்தையை  ஆதூரமாய்   வருடிய அவன் செயலில்   வியந்து  போன   குமுதாவை  அன்பாய் நோக்கினான்: அந்த பார்வையே  ஆயிரம்  அர்த்தங்களை  சொல்லமல்  சொல்லியது   குமுதினிக்கு … “என்னை மன்னித்துவிடு  குமுது… அத்தை  நீங்களும் ” என்றான்..

“சேச்சே என்னங்க  தம்பி பெரிய வார்த்தை எல்லாம் ”  என்றவள்  மனதில்.. இனி குமுதினி  வாழ்க்கைபிரச்சனை இல்லை என்ற  நிம்மதி  படர்ந்தது …

“அப்புறம் அத்தை  பணத்தை பத்தி நீங்க கவலைபடாதீங்க…எல்லாம் நான் பார்த்துகிறேன்…இனி நானும் உங்களுக்கு ஒரு மகனே..எதுவானாலும்   என்கிட்ட சொல்லுங்க.. மச்சான் படிப்பையும்  நான் பார்த்துகிறேன்” என்றவனை …

நெகிழ்ச்சியோடு   நோக்கிய செண்பகம் “ரெம்ப சந்தோசம்   தம்பி ” என்றாள்…

அப்போது…

பக்கத்து ரூமில் நர்ஸ் ராணி யாரையே ஏதற்கோ  திட்டி கொண்டு  இருப்பது காதில்விழ, நர்ஸ் ராணி   வெள்ளுடை தேவதையாய்  மட்டும் அல்ல  வெள்ளுடை  ஆசானாகவும் தெரிந்தாள்   அவர்களுக்கு…

சுசீலா சிவா..

மேட்டூர் அணை.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *