யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை – ஸ்ரீரங்கத்தில் அதிர்ச்சி!

Spread the love

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது. இந்த தங்கும் விடுதியை அறநிலையத்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். தற்போது, வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் திருவரங்கத்துக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். அந்த வகையில், கடந்த 10-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் (வயது: 67), இவரது மனைவி செண்பகவள்ளி (65), இவர்களது 42 வயதுடைய திருமணம் ஆகி விவாகரத்தான மூத்த மகள் பவானி , 37 வயதுடைய கண்பார்வையற்ற மகள் ஜீவா ஆகிய இரண்டு மகள்களுடன் ஸ்ரீரங்கம் வந்துள்ளனர்.

அதோடு, யாத்திரி நிவாஸில் 710- வது அறையை எடுத்து குடும்பத்துடன் தங்கினர். இந்நிலையில், கடந்த 4 நாள்களாக அறை கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த யாத்திரி நிவாஸ் ஊழியர்கள் இன்று அங்கு சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. உடனடியாக, இதுபற்றி ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உதவி போலீஸ் கமிஷனர் சீதாராமன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் உள்ளிட்ட போலீஸார் விரைந்து வந்தனர். பின்னர், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது நான்கு பேரும் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது கண்டறியப்பட்டது. இதில், மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. இளைய மகளுக்கு கண்பார்வை தெரியவில்லை என்று கூறப்படுகிறது. குடும்ப வறுமை ஒருபுறம் வாட்டி வதைத்த நிலையில், உறவினர்கள் யாரும் அவர்களுக்கு ஆதரவு தரவில்லையாம். இதனால், வறுமை ஒரு புறமும், மன உளைச்சல் மறுபுறமும் வாட்டிய நிலையில் சீனிவாசன் தனது குடும்பத்தினரோடு யாத்திரி நிவாஸில் அறை எடுத்து தங்கி உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்தது, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. யாத்திரி நிவாஸ் அறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *