சின்னத்திரையில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், எடிட்டர்கள் சங்கம் ஆகிய நான்கும் இணைந்த அமைப்பு “சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு’ எனப்படுகிறது.
சினிமாவில் பெப்சி இருப்பது போல் ஒட்டு மொத்த சின்னத்திரைக்கும் ஒரு பெரிய அமைப்பாக விளங்கும் இந்த அமைப்பின், நிர்வாகிகளை மேலே சொன்ன எல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் சேர்ந்து தேர்ந்தெடுப்பார்கள்.
தற்போது சீரியல் இயக்குநர்கள் சங்கத் தலைவராக இருக்கும் மங்கை அரிராஜன், சின்னத்திரை கூட்டமைப்புக்கும் தலைவராக இருக்கிறார்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த அமைப்புக்கு நடக்க இருந்த தேர்தல் காரணம் குறிப்பிடாமல் ரத்து செய்யப் பட்டுள்ளது.

தேர்தல் நடத்த நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் அதிகாரியே தேர்தலை நடத்த விரும்பாமல் ரத்து செய்து விட்டுச் சென்று விட்டார் என்கிறார்கள்.
‘என்ன பிரச்னை’ என சின்னத்திரை வட்டாரத்தில் விஷயமறிந்த சிலரிடம் பேசினோம்.
”நான்கு சங்கங்கள் அங்கம் வகிக்கிற கூட்டமைப்பின் நிர்வாகப் பொறுப்பு சுழற்சி முறையில் மாறிட்டே இருக்கும். இப்ப மங்கை அரிராஜன் இருக்கிறார். அடுத்த தேர்தல் நடத்த பொதுக்குழு ஒப்புதல் தந்துட்டா தேர்தலை நடத்தி என்ன முடிவு வருதோ அதை ஏத்துக்கிட்டுப் போயிடணும். ஒரு சங்கம்னா பொதுக்குழுவுக்கு மிஞ்சுன அதிகாரம் யாருக்கும் கிடையாது. இதுதான் வழக்கமான நடைமுறை. ஆனா இப்ப தலைவரா இருக்கிற மங்கை அரிராஜனுக்கு இப்ப தலைவர் பதவியில் இருந்து விலக மனமில்லை.