முதல் ஓட்டு
முதல் வாக்காளர் அட்டை திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு கிடைத்தது. முடிவாக என் விரலிலும் தேர்தல் மை பூசிக்கொண்டு ரசித்தபடி வெளிவந்தேன். நாங்கள் வசித்தது விருத்தாச்சலத்தின் அருகில் வேறு ஊரில். விஜயகாந்தின் கட்சித் தொண்டர்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என ரகசியமாக கேட்டனர். சிரித்துக்கொண்டே நகர்ந்தேன். (அந்த தேர்தலில் விஜயகாந்த் அவர்கள் அந்த பகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார்).
பிறகு இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்கும் வாய்ப்பு வந்ததில்லை கணவரின் தனியார் வேலை நிமித்தமாக பல மாநிலங்களில் மாறி மாறி வசித்து வருவதால் ஊருக்கு வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆனாலும் ஊர் திருவிழா போல் தேர்தல் விழா வரும்போதும் அரசியல் கட்சிகளின் ஆரவாரம், பேச்சுக்கள், கூட்டங்கள், சண்டைகள், வசவுகள்,வெற்றி பெற்றவரின் ஓட்டு எண்ணிக்கை என எதையும் விடுவதில்லை.
நமது இந்திய அரசாங்கம் புது சட்டம் கொண்டு வரலாம் தேர்தல் பணி செல்லும் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு இருப்பது போல வெளிமாநிலங்களில் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு ஏதேனும் வழிகள் செய்யலாம். தேர்தல் அன்று மட்டுமே விடுமுறை கிடைக்கும். ஆனால் பயணங்கள் ஒரு நாளில் முடிந்து விடுவதில்லை. கணவன், மனைவி இருவரும் ஓட்டுக்காக வருவதெனில் பிள்ளைகள்?? அவர்களையும் அழைத்து வந்தால் செலவு?? இவற்றையெல்லாம் சமாளிப்பது மிக கடினம்.