பொதுவாக, வார்டு கவுன்சிலர்கள் தான் மக்களோடு நேரடி தொடர்பில் இருப்பவர்கள். அப்படி இருக்கையில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வார்டு கவுன்சிலர்களை தன்னோடு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு தனது தொகுதிக்குள் அதிகாரிகளை மட்டும் அழைத்துச் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்பதாக புகைச்சல் கிளம்பி இருக்கிறது.
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மனதில் பட்டதைப் பட்டென பேசிவிடக் கூடியவர். அதுவே அவருக்கும் பல நேரங்களில் கட்சிக்கும் சத்ருவாக வந்து நின்று விடும். இந்தத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் மூன்றாவது முறையாக களமிறங்க தயாராகி வரும் பழனிவேல் தியாகராஜனை எதிர்க்க அதிமுக-வில் மாமன்ற எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, மா.ஜெயபால் உள்ளிட்டவர் களும் பாஜக தரப்பில் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் உள்ளிட்டவர்களும் தீவிர முயற்சியில் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் தவெக-வும் களத்துக்கு வரும் என்பதால் இம்முறை பிடிஆருக்கு போட்டி பலமாக இருக்கும் என கணிக்கப் படுகிறது. அதனால், முன்கூட்டியே தேர்தல் ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்ட பிடிஆர், கட்சிக்காரர்களை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் தானே நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார்.
அதேசமயம், தான் தொகுதிக்குள் செல்லும் போது அந்தப் பகுதிக்கான கவுன்சிலர்கள் யாரும் தன்னுடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு அதிகாரிகளை மட்டும் உடன் அழைத்துச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு வருகிறார். தனது விசிட்டின் போது மக்கள் சுட்டிக் காட்டும் குறைகளை உடனடியாக அதிகாரிகள் மூலம் சரிசெய்தும் வருகிறார்.
இந்த நிலையில், தங்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அமைச்சர் தன்னிச்சையாக அதிகாரிகள் புடைசூழ மக்களைச் சந்தித்து வருவது திமுக கவுன்சிலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களில் சிலர் இதுகுறித்து நம்மிடம் கூறுகையில், ‘‘எங்களுக்குத் தகவல் சொல்லாமல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிகாரிகளை மட்டும் அழைத்துக் கொண்டு வந்து மக்களை சந்திக்கிறார்.
எங்கள் வீட்டு வழியாக செல்லும் போதுகூட, எங்களை அழைத்துப் பேசாமல் வீட்டைக் கடந்து செல்கிறார். கடந்த தேர்தலில் அவருக்காக கடுமையாக உழைத்து அவரை ஜெயிக்க வைத்தோம். இப்போது எங்களை வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டு அவர் எப்படி ஜெயிக்கிறார் என்று பார்ப்போம்’’ என்றனர்.
ஆனால், அமைச்சரின் ஆதரவாளர்களோ, ‘‘கவுன்சிலர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்ற எண்ணமெல்லாம் அமைச்சருக்கு கிடையாது. குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்களே பார்த்து சரி செய்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யத் தவறியதால் அமைச்சர் நேரடியாக மக்களை சந்தித்து ஒவ்வொன்றாக சரி செய்கிறார். அந்த சமயத்தில் கவுன்சிலர்கள் உடன் வந்தால் மக்கள் தங்களின் குறைகளைச் சொல்ல பயப்படுவார்கள் என்பதால் தான் கவுன்சிலர்களை தவிர்த்துவிட்டு அதிகாரிகளை அழைத்துச் செல்கிறார்” என்கிறார்கள்.