யார் இந்த ஏஞ்செலா காரினி? இமென் கெலிஃபுடன் சண்டையிட மறுக்கக் காரணம் என்ன?

Dinamani2f2024 082f9c7fa469 244a 43dd B8ed 0888619d6cbb2fap24214431815167.jpg
Spread the love

பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிா் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவின் இமென் கெலிஃப் – இத்தாலியின் ஏஞ்செலா காரினி மோதினா். மோதல் தொடங்கிய 46 விநாடிகளுக்குள்ளாகவே போட்டியிலிருந்து விலகுவதாக காரினி அறிவித்தாா். அத்துடன், களத்திலேயே அவா் முழங்காலிட்டு அழுதாா். முடிவில், கெலிஃபுடன் கைகுலுக்கவும் அவா் மறுத்தாா்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான ஏஞ்செலா காரினியின் பின்னணி என்ன? அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமென் கெலிஃபுடன் ஏஞ்செலா காரினி சண்டையிட மறுக்க காரணம் என்ன?

யார் இந்த ஏஞ்செலா காரினி?

இத்தாலியைச் சேர்ந்த 25 வயதாகும் ஏஞ்செலா காரினி, 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை வீராங்கனை. அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஐரோப்பிய இளையோர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார் காரினி. ஏஞ்செலா காரினிக்கு அவரது தந்தை வைத்த செல்லப் பெயர் ”டைகர்”.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வியடைந்து வெளியேறிய கொஞ்ச நாள்களிலேயே காரினியின் அப்பா இறந்துவிட்டார். தந்தையும், தனது பயிற்சியாளருமான அவரை கௌரவப்படுத்தும் விதமாக பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு குத்துச்சண்டை மேடையேறினார் ஏஞ்செலா காரினி. அவரது கனவு 46 விநாடிகளில் தகர்ந்தது.

ஏஞ்செலா காரினியின் பின்னணி என்ன?

குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவதற்கு முன்னதாக துப்பாக்கி சுடுதலில் (க்ளே பீஜியன் சூட்டிங்) இத்தாலியின் சாம்பியனாக வலம் வந்துள்ளார் காரினி. அவரது சகோதரரும் துப்பாக்கி சுடுதல் வீரராக இருந்துள்ளார்.

சகோதரர் துப்பாக்கி சுடுதல் போட்டியை கைவிட்டு குத்துச்சண்டையில் தனது ஆர்வத்தை திருப்ப, ஏஞ்செலா காரினியும் குத்துச்சண்டையில் ஆர்வமானார். அப்பாவும், சகோதரரும் தனக்குக் குத்துச்சண்டை கற்றுக் கொடுத்ததாகவும், நான் அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் காரினி கூறியிருக்கிறார்.

இமென் கெலிஃபுக்கு எதிரான போட்டியில் ஏஞ்செலா காரினிக்கு நடந்தது என்ன?

பாரீஸ் ஒலிம்பிக்கின் மகளிா் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவின் இமென் கெலிஃபுடன் மோதிய ஏஞ்செலா காரினி, போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே விலகுவதாக அறிவித்தாா்.

ஏஞ்செலா காரினியின் இந்த செயல் பெரும் பேசுபொருளானது. மேலும், இமென் கெலிஃப் குறித்தும் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்த சர்ச்சை தொடர்பாக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பாக்கிடம் பேசினார். இமென் கெலிஃப் விதிமுறைகளுக்கு உட்பட்டே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டார் எனவும், அவர் மீது எந்த ஒரு தவறும் இல்லை எனவும் சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏஞ்செலா காரினி போட்டியிலிருந்து விலக காரணம் என்ன?

இமென் கெலிஃபுக்கு எதிரான குத்துச்சண்டை போட்டி தொடங்கிய சில விநாடிகளிலேயே போட்டியிலிருந்து விலகுவதாக ஏஞ்ஜெலா காரினி தெரிவித்தார். முதல் இரண்டு மூன்று குத்துகளிலேயே அவருக்கு மூக்கிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது.

போட்டியிலிருந்து விலகுவது குறித்து பேசிய ஏஞ்செலா காரினி, எனது முகம் மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது. என்னால் இனி போட்டியைத் தொடர முடியாது . எனது குடும்பத்தை நினைத்துப் பார்த்தேன். அரங்கத்தில் அமர்ந்திருந்த எனது சகோதரரைப் பார்த்தேன். அதன் பிறகு போட்டியிலிருந்து விலகுவதென்று முடிவெடுத்தேன். இதுபோன்ற சக்திவாய்ந்த குத்துகளை (பஞ்ச்) நான் ஒருபோதும் வாங்கியதில்லை. போட்டியிலிருந்து விலகுவது என்பது முன்னதாகத் தீர்மானிக்கப்பட்ட முடிவு அல்ல என்றார்.

போட்டியிலிருந்து விலகிய பிறகு ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பின் பேசிய ஏஞ்செலா காரினி, இந்த சர்ச்சைகள் அனைத்தும் எனக்கு சோகத்தை ஏற்படுத்துகின்றன. இமென் கெலிஃபை நினைத்தும் நான் வருத்தப்படுகிறேன். இமென் கெலிஃப் குத்துச்சண்டையில் போட்டியிடலாம் என சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு கூறியிருந்தால், அவர்களின் முடிவை மதிக்கிறேன்.

இமென் கெலிஃபுக்குக் கை குலுக்காமல் சென்றது வேண்டுமென்று செய்த செயல் கிடையாது. என்னுடைய அந்த செயலுக்காக இமென் கெலிஃபிடமும் மற்றவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு தகர்ந்துவிட்டதால் நான் கோபத்தில் இருந்தேன். கெலிஃபுக்கு எதிராக நடக்க வேண்டும் என எதையும் செய்யவில்லை. அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால், ஆரத் தழுவி கட்டியணைப்பேன் என்றார்.

இமென் கெலிஃப் பாலின ரீதியிலான பரிசோதனையில் தோல்வி கண்டதால் அவா் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *