யார் தங்கமான மனிதர்? பொன்மான் – திரைவிமர்சனம்!

Dinamani2f2025 01 312f63ujdbgk2fposter.jpg
Spread the love

மின்னள் முரளி இயக்குநர் பாசில் ஜோசப் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம்வந்துகொண்டிருக்கும் நிலையில் முதல்முறையாக சீரியசான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்தான் பொன்மான். ஆனால், சிரிப்புக்கும் பஞ்சமில்லை என்பது கூடுதல் போனஸ்.

ப்ரூனோ என்ற ஒரு கோபக்கார கம்யூனிஸ்ட் கட்சிக்கார இளைஞனின் தங்கை (லிஜோமோல் ஜோஸ்) திருமணத்தில் தொடங்கும் கதை அடுத்த சில தினங்களில் முடிவடைகிற மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.

த்ரில்லராக உருவாகியுள்ள பொன்மான் திரைப்படம் ஒருவருக்கு தேவை என்று வரும்போது மனித மனங்களின் போக்கு குறித்து ஆழமாக பேசியிருக்கிறது. சரி, தவறு என்று யார் பக்கமும் சாய்ந்து விடாதபடி கதை அமைக்கப்பட்ட விதத்துக்கு திரைக்கதை ஆசிரியர்களுக்குதான் பாராட்டு.

ஒரு திருமணத்தில் தொடங்கும் பொன்மான் படம் கடைசியில் முடிவடையும்போது அது ஒரு சமூகத்திற்கான படமாக மாறுவதுதான் படத்தின் மகத்தான வெற்றி.

கேரளத்தின் கொல்லம் மாவட்டம் குறித்த அறிமுகக் காட்சிகள் அதன் அருமை பெருமைகளை சொல்வதுடன் படத்தின் கதைக்களத்தினையும் அமைத்துவிடுகிறது என்பது படத்தின் பிற்பகுதியில்தான் புரிகின்றன.

தங்க நகைகள்.

வரதட்சிணைக்காக தங்கம் வேண்டி அலையும் லிஜோமோல் அம்மாவின் காட்சிகள், மீதமான சாப்பாட்டை கடலில் கொட்டும் காட்சிகள் எல்லாம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தங்க நகைகள் ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் வருகின்றன. யாருக்கும் தங்க மனசு? என்பதை இந்தப் படம் அருமையாக விவரித்துள்ளது.

நடுத்தர குடும்பத்துக்கு தங்கம் எவ்வளவு முக்கியமெனத் தெரியும். தங்கம் அவர்களுக்கு கௌரமாக இருக்கிறது. ஒரு பெண்ணின் திருமணத்தினால் குடும்பத்தில் ஆண்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை படம் நெடுகிலும் காட்சிப் படுத்தியுள்ளார்கள்.

லிஜோமோல்

பெரும்பாலான காட்சிகள் இரவில் எடுக்கப்பட்டுள்ளன. அதை சிறப்பாக ஒளிப்பதிவு செய்கிறார் சனு ஜான் வர்கீஸ். அதிகமான இடங்களில் வரும் குளோஸ்-அப் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

சிறு வயதில் தங்கையை தூக்கி வளர்த்தது குறித்து அண்ணன் ஒருவன் பேசும்காட்சிகளுக்கு பார்வையாளர்களை சிரிக்க வைத்த பிளாக் ஹியூமர் நன்றாக இருக்கிறது. இந்த வகையினால் நகைச்சுவைகள் படம் முழுவதும் நிரம்பி இருப்பது ரசிக்க வைக்கின்றன.

பாசில் ஜோசப்

படம் தொடங்கி சுமார் 15-20 நிமிஷங்களுக்குப் பிறகே வருகிறார் நாயகன் பாசில் ஜோசப். அயர்ன்செய்த சட்டை, டக்-இன் செய்த மிகவும் ஜென்டில்மேன் தோற்றத்தில் தன்னைப் பற்றிய பெருமிதத்துடன் பி.பி. அனீஷ் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சியிலேயே அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

ஒரு தற்கொலைக் காட்சியிலும் அதனைத் தொடர்ந்துவரும் காட்சியிலும் மிகவும் சிறப்பான வசனங்களைப் பேசி நடித்திருப்பார். அவர் ஒருகாட்சியில் அடிவாங்கி அழும்போது நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்களின் ஆற்றாமை வெளிப்படும். இவ்வளவு ரிஸ்க்கான வேலையில் ஒருவன் இறங்குவதன் பின்னணியை காட்சிப்படுத்தும்போது பார்வையாளர்கள் மனம் அசையாமலில்லை.

ரோமாஞ்சம், சுருளி, ஆவேஷம் படத்தில் கலக்கிய சஜின் கோபு இந்தப் படத்திலும் அசத்தியுள்ளார். இவரது கதாபாத்திரம்தான் படத்தினை கமர்ஷியலாக வெற்றிபெற உதவுகிறது. இவரது உருவமே பார்வையாளர்களுக்கு ஒரு மிருகத்தை போன்ற உணர்ச்சியைத் தருகிறது. இவரது அறிமுகக் காட்சி மிகவும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது.

சஜின் பாபுவிடம் பாசில் ஜோசப் சண்டையிட முடியுமா? அதை உறுத்தாமல் பார்வையாளர்களுக்கு கடத்தியதில் அறிமுக இயக்குநர் ஜோதிஷ் சங்கர் கவனம் ஈர்க்கிறார்.

சஜின் கோபு

ஜி.ஆர். இந்துகோபாலன் எழுதிய ‘நாலஞ்சு செறுப்புக்கார்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாவலின் ஆசிரியரும் மின்னல் முரளியின் திரைக்கதையில் பங்காற்றிய ஜஸ்டின் மேத்திவ்வும் இணைந்து எழுதியுள்ளார்கள். அதனால்தான் என்னவோ ஒரு அடர்த்தியான நாவலைப் படிப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டன.

அசோகமித்திரன் எழுதிய தண்ணீர் நாவலில் மக்கள் எவ்வளவு சுயநலமாக இருந்தாலும் அவரவர் பார்வையில் அவர்கள் செய்வது நியாயமாக இருக்கும். அதேபோலத்தான் இதில் வரும் பிராதன கதாபாத்திரங்களும் அவரவர் சூழலில் சரியாகவே இருக்கும்.

லிஜோமோல் ஜோஷின் கதாபாத்திரம் படத்தின் தொடக்கத்தில் அவுட் ஆஃப் போகஸில் இருக்கும். படம் முடியும்போது பிராதனமான கதாபாத்திரமாக வளர்ச்சியடைந்திருக்கும். படத்தின் தலைப்புக்கு அர்த்தம் இவரது கதாபாத்திரத்தினால்தான் முழுமை அடைந்திருக்கிறது.

லிஜோமோல்

வரதட்சினையினால் ஆண்கள் படும் பாடுகளை படம் விவரித்தாலும் அதன் நேரடி பாதிப்பாக இருப்பவர்கள் பெண்கள்தான்.

லிஜோமோல் – சஜின் கோபு – பாசில் ஜோசப் மூவருக்கும் இடையேயான காட்சிகள் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டு அதேசமயம் அழகாக படம்பிடித்துள்ளார்கள். நடிப்பில் மூவருமே கலக்கியிருக்கிறார்கள்.

சஜின் கோபுவின் அம்மாவக நடித்திருப்பவர் மிகவும் நேர்த்தியான சிடுமூஞ்சி கதாபாத்திரத்துக்கு உயிர்க்கொடுக்கிறார்.

படத்தின் நீளம் 2 மணி நேரம் என்பதால் அது மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. அது படத்தின் பலம். பலவீனமானது என கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியை மட்டுமே சொல்லமுடியும்.

வேலைதான் என்றாலும் உதவிசெய்ய வந்து பிரச்னையில் சிக்கும் பாசில் ஜோசப் கதாபாத்திரம் கடைசியில் அந்தப் பிரச்னையில் இருந்து தப்பித்தாரா என்பதை த்ரில்லராக மட்டுமில்லாமல் வாழ்வின் அவல நகைச்சுவை கலந்தும் கலையமைதி குறையாமலும் எடுக்கப்பட்டிருக்கும் பொன்மான் திரைப்படம் இந்த வருடத்தின் மிகச் சிறந்த படங்களின் பட்டியலில் உயர்ந்து நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *