யு-19 மகளிர் ஆசியக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

Dinamani2f2024 12 202f2knfcqyq2fgfoh52rbuaa1vrm.jpg
Spread the love

19 வயதுக்குள்பட்ட மகளிருக்கான முதலாவது ஆசியக் கோப்பைத் தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவருகிறது.  

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மலேசியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

மொத்தமாக 6 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்தத் தொடரில் இருபிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் நிக்கி பிரசாத், இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மனுடி 33 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆயுசி சுக்லா 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 20 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஐஸ்வரி டக் அவுட்டாகி வெளியேற பின்வரிசையில் வந்தவர்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக திரிஷா 32 ரன்களும், கமலினி 28 ரன்களும் விளாசினர்.

14.5 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்றும் வங்கதேசம் – மலேசியா இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி இந்திய அணியுடன் டிசம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இந்திய அணி லீக் போட்டிகளில் முதல் போட்டியில் பாகிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தியது. நேபாளத்துக்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *