இந்த நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கெய்ர் ஸ்டார்மர் இன்று(அக். 7) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, யூதர்கள் வரலாற்றில் இருண்ட நாளாக அமைந்துவிட்டது. இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இந்நேரம் நினைவுகூருகிறோம்.
ஹமாஸ் படையினா் இஸ்ரேலில் நடத்திய கொடூர தாக்குதல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். சிசுக்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலர் ஹமாஸை சேர்ந்த பயங்கரவாதிகளால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதுடன், கொலையும் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சித்திரவதைகளும் அடுத்தடுத்த நாள்களில் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தாங்கள் நேசித்த தங்கள் உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களை பார்த்து -ஒரு தந்தையாக, ஒரு துணைவனாக, ஒரு மகனாக, ஒரு சகோதரனாக துயருற்றதாக பிரிட்டன் பிரதமர் வேதனையைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, பாதிக்கப்பட்டவர்களின் துக்கமும், வேதனையும், நம்முடையதும் கூட. எல்லைகளைக் கடந்து இது நம் குடும்பங்களிலும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. ஓராண்டு ஆகியும், இந்த துயரம் ஓய்ந்தபாடில்லை.
இந்த நிலையில், ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளவர்களை மீட்பதில் உறுதியாக இருப்பதாகவும், அவர்களை மீட்டு அழைத்து வரும் வரை ஓயப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.