சென்னை: தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: டாடா குழுமத்தின் கவுரவத் தலைவர் ரத்தன் டாடா காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன். தன்னுடைய தொழில் நேர்மையினாலும், வள்ளல் தன்மையாலும், சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பாகும். மறைந்த திரு ரத்தன் டாடா அவர்தம் குடும்பத்தாருக்கும், டாடா நிறுவனத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: ரத்தன் டாவின் பங்களிப்புகள் நமது தேசத்திற்கும் மக்களுக்கும் அளவிட முடியாதது. வணிக நடைமுறைகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும். அவரது வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கமளிக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் டாடா குழுமத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகப்புகழ் பெற்ற தொழில் வணிக நிறுவனமான டாட்டா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்தியாவின் தொழில் வணிக வரலாற்றையும், தாராளமயமாக்கல் வரலாற்றையும் ரத்தன் டாட்டாவை விலக்கி விட்டு எழுத முடியாது.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் 1992-ஆம் ஆண்டில் டாட்டா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற ரத்தன் டாட்டா தமது குழுமத்தை உலகம் முழுவதும் பரப்பினார். கல்வி, சுகாதாரம், துப்புறவு உள்ளிட்டவற்றுக்காக வாரி வழங்கியவர். முக்கியத் துறைகளில் இந்தியாவின் கொள்கைகளை வகுக்க துணை நின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திய ரத்தன் டாட்டா வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவருமான திரு.ரத்தன் டாடா அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தியாவை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட டாடா நிறுவனத்தை தன் தொலைநோக்கு சிந்தனையால் உலகளாவிய வணிகமாக மாற்றிய ரத்தன் டாடாவின் மறைவு இந்திய தொழில்துறைக்கு பேரிழப்பாகும்.
பாமக தலைவர் அன்புமணி: இந்தியாவின் புகழ்பெற்ற டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், வணிகத்தில் அறத்தைக் கடைபிடித்தவருமான ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த ரத்தன் டாட்டா, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தாலும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்தவர். ஏழைகளுக்கும் மகிழ்ந்து கிடைக்க வேண்டும் என்று போராடியவர். அவரது மறைவு இந்தியத் தொழில்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். இந்தியத் தொழில்துறையில் அறம் என்றால் ரத்தன் டாட்டாவின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வரலாற்றில் அவரது பெயர் நிலைத்து நிற்கும்.