ரயிலில் உரிய பயணச்சீட்டு இன்றி பயணித்த பயணிக்கு அபராதம் விதித்த ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மும்பையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயிலில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் வெள்ளிக்கிழமை(ஆக. 16) காலாவதியான பயணச்சீட்டுடன் பயணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரயில் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதகர் ஜஸ்பர் சிங் என்பவர் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரிடம் அந்த பயணி காலாவதியான பயணச்சீட்டை காண்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபரிடம் அபராதம் செலுத்துமாறு ஜஸ்பர் சிங் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனை ஏற்க மறுத்த அந்த பயணி பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போரிவாலி ரயில் நிலையத்தை ரயில் சென்றடைந்தபோது, அந்த பயணியை ரயிலை விட்டு கீழே இறங்குமாறு பணித்துள்ளார் பரிசோதகர். அதில் ஆத்திரமடைந்த அந்த பயணி, தன்னுடன் பயணித்த இருவருடன் சேர்ந்து பரிசோதகரின் சட்டையைப் பிடித்து அதட்டியதுடன், தகாத வார்த்தைகளால் அநாகரிகமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 50 வயதைக் கடந்த ஜஸ்பர் சிங்கின் கண் கண்ணாடியைப் பறித்து கீழே எறிந்த அந்த பயணிகள், அவரை கடுமையாகத் தாக்கவும் முற்பட்டுள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவலர்கள், பரிசோதகரை மிரட்டிய பயணியை ரயிலிலிருந்து கீழே இறக்கிவிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதன்பின், அவரிடம் அபராதத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தியதுடன், பரிசோதகரிடம் முறை தவறி நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.