சென்னை: மக்களவைத் தேர்தல் நேரத்தில் ரயிலில்ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி சிக்கியது.
இந்த பணத்தை கொண்டு சென்றதாக பாஜக நெல்லை வேட்பாளரான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், ஸ்ரீவைகுண்டம் பெருமாள் ஆகியோரை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், அந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கைமாற்றப்பட்டு நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பணத்துடன் பிடிபட்ட மூவர் மற்றும் நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன்அனுப்பி விசாரணை நடத்தினர்.
பணம் கைமாறியதாக கூறப்படும் தமிழக பாஜக வர்த்தக பிரிவு தலைவர்கோவர்தனுக்கு சொந்தமான சென்னைபசுமைவழி சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
கோவையில் உள்ள பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரின் வீட்டுக்குச் சென்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதுவரை சுமார் 15 பேரிடம் விசாரித்து முக்கிய ஆவணங்களை பறிமுதல்செய்துள்ளனர். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் கேசவ விநாயகன் ஆஜராகி விளக்கம் அளித்தார். பாஜக மாநில பொருளாளரான எஸ்.ஆர்.சேகர் ஆஜராவதில் விலக்கு கேட்ட நிலையில் நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து அண்மையில் விசாரணக்கு ஆஜரானார்.
நயினார் நாகேந்திரனுக்கு பலமுறைசம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், நேற்று காலை 10.20 மணியளவில் அவர் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அப்பிரிவு போலீஸார் ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி விவகாரம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டனர்.
அதற்கு அவர் அளித்த பதில்கள்அனைத்தும் எழுத்து பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்தும் கேள்விகள் கேட்கப்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
காலை 10.20 மணிக்கு தொடங்கிய விசாரணை, மாலை 6.30 மணி வரை சுமார் 8 மணி நேரம் நடந்தது. விசாரணைக்கு பின்னர் வெளியே வந்தநயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து என்னிடம் கேட்டனர். எனக்கும், அந்த பணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தேன்’’ என்றார்.