சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதை தவிர்க்க, ரயில் நிலையங்களில் அடுத்தவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள், பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்ற பொருட்களை கொண்டு செல்ல தடை இருந்து வருகிறது. இருப்பினும், தீபாவளிநெருங்கும்போது, வியாபாரிகள் அல்லது பயணிகள் சிலர் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். இதை தவிர்க்க கோரி,ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதுபோல, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம், கிண்டி உட்பட முக்கியரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணிகள் பட்டாசுகளைகொண்டு செல்ல முயற்சிப்பதில்லை. இருப்பினும், சிலர் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற பயணிகளுக்கும் ஆபத்துஏற்படுகிறது. விதியை மீறி பட்டாசு கொண்டு சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.1,000 அபராதம்: முதல்முறையாக பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதி மீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும். தீபாவளி நெருங்கவுள்ள நிலையில், அடுத்த வாரம் ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து ஆர்.பி.எப்., சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் நவீன ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.