புதுக்கோட்டை: ரயில்வே திட்டத்தில் மத்திய அரசின் பார்வையும், மக்களின் தேவையும் இருவேறு திசையில் இருக்கிறது என சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ஹரியானாவில் வெற்றி பெற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. இதற்கான காரணத்தை ஆராய வேண்டும்.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி உயிரோட்டத்துடன் தான் இருக்கிறது. வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முறையாகக் கையாண்டிருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.
இந்திய விமானப்படை தன்னுடைய வலிமையை சென்னை மக்களுக்கு காண்பித்ததில் எனக்குப் பெருமை. பெரிய கூட்டம் வரும் என அனைவருக்கும் தெரியும் தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.
அங்கு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவது போதாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்திய ரயில்வே நிர்வாகமும், மத்திய அரசும் பெரிய பெரிய நகரங்களுக்கு இடையே வேகமான ரயில்களை கொண்டு வருவதில் தான் முக்கியத்துவம் அளிக்கிறது.
சிறிய நகரங்களின் வளர்ச்சிக்கு தேவையான ரயில் வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் விருப்பமே இல்லை. ரயில்வே திட்டத்தில் மத்திய அரசின் பார்வையும், மக்களின் தேவையும் இருவேறு திசைகளில் இருக்கிறது. வேகமான ரயில்களை இயக்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டாமல், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதிலும் மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும் என்றார்.