அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்புடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் மீதான தாக்குதலை அதிகரிக்க வேண்டாம் என்று புதினிடம் டிரம்ப் வலியுறுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இரு நாடுகளின் அரசுத் தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, தன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால் ரஷியா – உக்ரைன் போரை உடனடியாக நிறுத்துவேன் என்று உறுதி அளித்திருந்தார்.
உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துவரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் அல்லது வெகுவாகக் குறைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படும் சூழலில், இரு நாட்டு அதிபர்களின் உரையாடல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக் கொண்டார் இஸ்ரேல் பிரதமர்!
புதின் புகழாரம்
ரஷியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கடந்த வாரம் பேசிய புதின், “தனது முதல் ஆட்சிக்காலத்தின்போது எல்லா பக்கத்திலிருந்தும் டொனால்ட் டிரம்ப் குறிவைக்கப்பட்டாா். இருந்தாலும், அதையெல்லாம் பொருள்படுத்தாமல் மீண்டும் தோ்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ள அவா் மிகவும் தீரம் மிக்கவா்” எனத் தெரிவித்தார்.
மேலும், ஆட்சிக்கு வந்த ஒரே நாளில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக டிரம்ப் கூறியிருப்பது கவனிக்கத் தக்கதுதான் என்று அவர் தெரிவித்திருந்தார்.