உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதற்குப் பிறகு முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருக்கிறார்.
உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பல்வேறு கட்ட முயற்சிகள், இறுதியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டதில் வந்து நின்றது.
அதைத் தொடர்ந்து மெல்ல கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைக்கத் தொடங்கிய இந்தியாவுக்குத்தான் தற்போது புதின் வருகை தந்திருக்கிறார்.
இந்தியா வந்த புதினை பிரதமர் மோடி நேரில் சென்று ஆரத் தழுவி வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து பிரதமர் இல்லம் வரை இருவரும் ஒரே காரில் பயணித்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு அதிபர் புதினுக்குச் சிறப்பு விருந்து ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. அப்போது பிரதமர் மோடி அதிபர் புதினுக்கு பகவத் கீதையைப் பரிசாக வழங்கினார்.
அது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், “ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகமளிக்கிறது” எனப் பதிவிட்டிருக்கிறார்.