2025-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி இந்தியா பாகிஸ்தானில் ‘ஆபரேஷன் சிந்தூரை’ நடத்தியது. அதன் பிறகு, அது விஸ்வரூபம் எடுத்து… பின் சமாதானம் என மே 10-ம் தேதியே அதற்கொரு என்ட் கார்டு வந்துவிட்டது.
‘இந்தச் சமாதானம் பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுகொண்டதால்’ என்று இந்தியா கூறியது… இன்று வரை கூறுகிறது.
ஆனால், ட்ரம்போ, ‘நான் வரியைக் காட்டி பயமுறுத்தினேன்… ஒப்பந்தத்தைக் காட்டி பயமுறுத்தினேன்’ என்று இந்த நொடி வரை திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.
அதற்கு தான் இந்திய பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்து விட்டாரே என்பது உங்களது மைன்ட் வாய்ஸா?
இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் முடிந்த அன்றே, இந்தியா தெரிவிக்கும் முன்பே, ‘நான் தான் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்’ என்று பறைசாற்றி விட்டார்.

ஆனால், இதை இந்தியாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மூன்று நாள்கள் கழித்து மே 13-ம் தேதி மறுத்தார்.
இதன் பின், கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, ஜூன் 17-ம் தேதி, ட்ரம்ப் உடனான போன்காலில் மோடி இந்த விஷயத்தை வலியுறுத்தினார்.
இந்தியாவின் அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்று, ‘இறையாண்மை’.
அதற்கே ஒரு பாதிப்பு வரும் போது, இந்தியா உடனே எதிர்வினையாற்றாமல் மூன்று நாள்கள் கழித்து காலம்… நேரம் பார்த்து மறுப்பு தெரிவித்தது!