அம்பேத்கரை அவமதிப்பு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் அவர் பதவி விலகக்கோரியும், அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, நுழைவு வாயிலில் அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க: ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர்
இது தள்ளுமுள்ளாக மாறிய நிலையில், பாஜகவின் எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தி தள்ளிய ஒரு எம்பி தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதார் சந்திர சாரங்கி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது பாஜக தரப்பில் எம்பிக்கள் குழு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி தாக்கப்பட்ட சம்பவத்தில் ராகுல் காந்தி மீது நாடாளுமன்ற தெரு காவல்நிலையத்தில் வியாழக்கிழமை(டிச.19) முதல் தகவல் அறிக்கை பதிந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக எம்.பி.