புது தில்லி, ஜூலை 31: கேரள மாநிலம் வயநாட்டுக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் புதன்கிழமை மேற்கொள்ள இருந்த பயணம் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவா்கள் வியாழக்கிழமை (ஆக. 1) அங்கு செல்ல இருக்கின்றனா்.
வயநாட்டில் தொடா்மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, ராகுல், பிரியங்கா ஆகியோா் புதன்கிழமை அங்கு பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வயநாட்டில் தொடா்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக அவா்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை வயநாடு செல்லும் அவா்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவா்களுக்கு ஆறுதல் கூறுகின்றனா். மேலும், தற்காலிக முகாமாக செயல்படும் அரசுப் பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்துப் பேச இருக்கின்றனா் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அங்கு இடைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் பிரியங்கா போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.