ராசிபுரத்தில் 3 கொள்ளையர்கள் கைது: போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற 2 பேருக்கு கை, கால் முறிவு

Dinamani2f2025 02 012fckybdqrp2frasi.jpg
Spread the love

ராசிபுரம்: தமிழகத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூன்று கொள்ளையர்களை ராசிபுரத்தில் போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக, போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற இரு கொள்ளையர்களுக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி ஶ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த கோமதி(45), வெண்ணந்தூர் பகுதியில் கூட்டுறவு சங்க ஊழியராக பணிபுரிந்து வருகிறார். முத்து காளிப்பட்டி பகுதியில் உள்ள இவரது வீட்டில் கடந்த மாதம் 20 ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் தங்க நகை திருட்டுப் போனதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்ற ராசிபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் மேற்கொண்டு வந்தனர்.

திருட்டு நடைபெற்ற வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் செல்வதை சிசிடிவி கேமரா மூலம் அறிந்த காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் எம்.விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணைப்பாளையம் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததை கண்ட 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தை டேவிட் என்ற நபர் அதிவேகமாக ஒட்டிய போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூவரில், இருவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது. அவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க |மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது சென்னையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் டேவிட்(எ)சுந்தர்ராஜ்(24), செல்வம் மகன் மணி(22), வேலூர் பகுதியை சேர்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன்(47) ஆகியோர் என தெரியவந்தது. மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விசாரணையில் கடந்த மாதம் 20 முதல் 23 ஆம் தேதி வரை சேலம்,ராசிபுரம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 நாள்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டபோது 3 திருடர்களும் இருசக்கர வாகனத்தில் பல்வேறு மாவட்டங்களில் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது, தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

தற்போது பிரபல 3 திருடர்கள் மீது மட்டும் 74 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *