மேலும் உடல் வெப்பத்தால் உண்டாகும் அம்மை, அக்கி, காய்ச்சல் முதலான நோய்கள் நீங்கவும் இங்கே வேண்டிக்கொள்கிறார்கள். அன்னையும் அவர்களுக்கு விரைவில் நோய் நீங்க அருள் செய்கிறாள்.
உள்ளூரில் ஒரு நம்பிக்கை உள்ளது. கணவருக்கு உடல்நலப்பிரச்னை என்றால் பெண்கள் நேரே ஆலயத்துக்கு வந்து கோயில் கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, வேம்புக்கம்பத்துக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து பிரார்த்திக்கின்றனர்.
முடிந்தால் சிலர் பால் அபிஷேகம் செய்து, மஞ்சள்- குங்குமம் இட்டு, வஸ்திரம் அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கணவர் விரைவில் நலம் பெறுவார் என்பது நம்பிக்கை.
அதேபோன்று, ஐப்பசி மாத திருவிழாவின் 3-ஆம் நாள் வேம்புக்கம்பம் மாற்றும் நிகழ்ச்சியின்போது, பிள்ளை வரம் வேண்டி நிற்கும் பெண்களுக்கு மட்டும் தயிர் சாத பிரசாதம் வழங்கப்படுகிறது.

இந்தப் பிரசாதத்தைப் பெற விரும்பும் பெண்கள், காப்புக் கட்டிய நாளிலிருந்து பயபக்தியுடன் விரதம் கடைப்பிடிப்பார்களாம். பிரசாத தயிர் சாதம் பெறுவதற்காக, வெளியூர் பெண்களும் பெருமளவில் இந்தக் கோயிலுக்கு வந்து கலந்துகொள்கிறார்கள்.
இங்குள்ள ஊஞ்சலில் அம்மனின் பாதச்சுவடு பதிக்கப்பட்டுள்ளது. மனதுள் இனம் புரியாத பயம், சோர்வு, கலக்கம் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அம்மனை வழிபட்டு, இந்த ஊஞ்சலை மூன்று முறை ஆட்டிவிட்டு, பிரார்த்தித்து சென்றால், பயம் விலகி மனம் குளிரும் என்கிறார்கள்.
இது அன்றாடம் நடக்கும் அதிசயம் என்கிறார்கள் பக்தர்கள். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ராசிபுரத்தில் அருளும் நித்ய சுமங்கலி அம்மனைத் தரிசனம் செய்து வாழ்வில் நலம் பெறுங்கள்.