ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்ற எதிர்ப்பு: உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஐகோர்ட் அனுமதி | Opposition to Shifting of Rasipuram Bus Stand: High Court Order to Allow Hunger Strike

1287751.jpg
Spread the love

சென்னை: ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

இது தொடர்பாக ராசிபுரம் நகர அதிமுக செயலாளரும், ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் குழு நிர்வாகியுமான எம்.பாலசுப்ரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 1991-ம் ஆண்டு முதல் ராசிபுரம் பேருந்து நிலையம் தற்போதுள்ள இடத்தில் செயல்பட்டு வருகிறது. பல கோடி ரூபாய் செலவில் இந்த பேருந்து நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்கள், வியாபாரிகள் என யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து நிலையம் உள்ள பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை காவல் துறை நிராகரித்து விட்டது. எனவே, பேருந்து நிலைய இடமாற்றத்தை எதிர்த்து அப்பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், “மனுதாரர் கோரும் இடத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியளிக்கப்படுவதில்லை. மாற்று இடத்தில் அனுமதியளிக்கத் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.செல்வம், மற்ற கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு பேருந்து நிலைய பகுதியில் அனுமதியளிக்கப் பட்டு வருவதாகக் கூறி அதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார். அதையடுத்து நீதிபதி, “பொதுக் கூட்டங்களுக்கு அந்த இடத்தி்ல் அனுமதியளிக்கும்போது உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள ஏன் அனுமதியளிக்கக் கூடாது?” என கேள்வி எழுப்பியதுடன், மனுதாரர் கோரியுள்ள இடத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதியளிக்க ராசிபுரம் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *