ராஜபாளையத்தில் கனமழை: அரிசி ஆலை சுவர் இடிந்து 50+ ஆடுகள் உயிரிழப்பு | 50 goats die after wall collapses in Rajapalayam

1380224
Spread the love

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் இன்று அதிகாலை பெய்த கனமழையில் தனியார் அரிசி ஆலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன.

ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். முருகன் அதே பகுதியில் தொழுவம் அமைத்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து ஆடுகளை தொழுவத்தில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றார்.

ராஜபாளையம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அதிகாலை 3 மணி அளவில் தொழுவத்தின் அருகே உள்ள தனியார் அரிசி ஆலையின் 25 அடி உயரமுள்ள சுற்றுச் சுவர் இடிந்து தொழுவத்தின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன. இதுகுறித்து தளவாய்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் டி.எஸ்.பி பஸினா பீவி, வட்டாட்சியர் ராஜீவ்காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தனியார் அரிசி ஆலையை சுற்றிலும் தரையில் இருந்து 10 அடி உயரத்திற்கு மண் நிரப்பி, அதன்மேல் 15 அடி உயரத்துக்கு சுற்றுச் சுவர் எழுப்பியதால் மண் சரிந்து சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அரிசி ஆலையை சுற்றிலும் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை இடிக்க வருவாய்த் துறையினர் உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *