சென்னை: ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது?
பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்துக்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு. ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான பெயிலியர் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க திமுக மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன? – ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் தென்பாண்டி நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் இரவு நேர காவலாளிகள் இருவர், பகல் நேர காவலாளி ஒருவர் என 3 பேர் பணியில் உள்ளனர். நேற்று இரவு காவலாளிகள் பேச்சி முத்து(50), சங்கர பாண்டியன் (65) ஆகியோர் பணியில் இருந்தனர். செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணி அளவில் பகல் நேர காவலாளி கோயிலுக்கு வந்தார். அப்போது கோயில் கொடி மரம் அருகே இரு காவலாளிகளும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டும், கேமரா பதிவு உள்ள டி.வி.ஆரையும் கொள்ளையர்கள் கையோடு எடுத்துச் சென்றனர். கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. கோயிலில் பழமை வாய்ந்த சிலைகள், நகைகள் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.