ராஜஸ்தானில் மாணவனுக்குக் கத்திக்குத்து: இஸ்லாமிய மாணவனின் வீட்டை இடித்த மாவட்ட நிர்வாகம்!

Dinamani2f2024 08 172ft57uublb2fgvmh V Bwaadjzz.jpeg
Spread the love

ராஜஸ்தான் உதய்பூரில் பள்ளியில் உடன் படிக்கும் மாணவனை கத்தியால் குத்திய இஸ்லாமிய மாணவனின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்தது வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டியுள்ளது.

ராஜஸ்தான் உதய்பூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவன் தனது வகுப்பில் படித்த சக மானவனை நேற்று (ஆகஸ்ட் 16) கத்தியால் குத்தியுள்ளான். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் உதய்பூரில் சமூக பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உதய்பூர் கலவரம்

மேலும், கத்தியால் குத்திய மாணவனின் வீட்டை மாவட்ட நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனால் வகுப்புவாதக் கலவரங்கள் ஏற்படுவதைத் தடுக்க உதய்பூரில் பல இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 16) இரவு முதல் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு உதய்பூரில் அனைத்துப் பள்ளிகளும் மூட உத்தரவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் காயமடைந்த மாணவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குற்றம் செய்த மாணவர் போலீஸ் காவலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க ஜெய்ப்பூரில் இருந்து 3 மருத்துவர்களின் குழுவை ஒரு சிறப்பு விமானத்தில் அனுப்பியுள்ளதாகவும், இந்த சம்பவத்தைப் பற்றிய வதந்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டுமெனவும் உதய்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் போஸ்வால் தெரிவித்துள்ளார்.

உதய்பூர் நகரின் பெட்லா, பத்கான், ப்ளீச்சா, தேபாரி, எக்லிங்க்புரா, கான்பூர், தீக்லி மற்றும் புவானா பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் 24 மணி நேரத்திற்கு மொபைல் இணைய சேவைகளை நிறுத்தி வைத்து உதய்பூர் ஆணையர் ராஜேந்திர பாட் உத்தரவிட்டுள்ளார்.

இந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலர், கத்தியால் மாணவன் குத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுபான் பகுதியில் கற்களை வீசியும் கார்களுக்கு தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உதய்பூரில் பதற்றம் அதிகரிக்கவே அங்குள்ள பெரும்பாலான கடைகளும், சந்தைகளும் மூடப்பட்டன. சிலர் மால்களில் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கலவரங்களைத் தடுக்கக் காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகிகளும் கூட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *