மகாராஷ்டிராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி சேருவதில் உறுதியாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் தற்போது சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்), காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இக்கூட்டணி கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அதோடு காங்கிரஸ் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

இதையடுத்து மும்பை மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரேயையும் சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். மும்பை மாநகராட்சி தேர்தல் கூட்டணியில் ராஜ் தாக்கரேயை சேர்க்க ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டி வருகிறது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சி மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தது. இது உத்தவ் தாக்கரேவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. எனவே தாராளமாக காங்கிரஸ் தனித்து போட்டியிடலாம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ராஜ் தாக்கரே கட்சி ஆரம்பத்தில், மாநிலத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு மராத்தி பேசாதவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதோடு மசூதிகளில் ஒலிபெருக்கி வைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தது.
இது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி இனம், மொழி அடிப்படையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ஆனால் மும்பையை எப்படியும் மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருப்பதால்தான் தனது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.