ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட வி.சி.மோட்டூர் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனமான `ராணிடெக்’ செயல்பட்டு வருகிறது. இன்று காலை, ராணிடெக்கிற்குச் சொந்தமான கழிவுநீர் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஏழுமலை, சாந்தகுமார், ரமேஷ், இப்திகார் உல்கக் என்கிற நான்கு தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, விஷவாயு தாக்கியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு நான்கு பேரும் துள்ளத் துடிக்க மயங்கினர். இதைப் பார்த்த பெண் தொழிலாளிகள் விரைந்து நான்கு தொழிலாளிகளையும் மீட்டு, முதலுதவி அளிக்க முயன்றனர். தொடர்ந்து, பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களை விரைவாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கும் தூக்கிசென்றனர்.

அங்கு நால்வருக்கும் தீவிர அளிக்கப்பட்டபோதும், ஏழுமலை என்ற ஒருவரின் உடல்நிலை மட்டும் மிகமோசமானதாகக் கூறி மேல்சிகிச்சைக்காக சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். முதற்கட்ட விசாரணையில், தொழிலாளிகளின் உயிரைப் பொருட்படுத்தாமல், அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும் ராணிடெக் நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நிகழ்விடத்தில், விஷவாயு பரவலைத் தடுக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். பதைபதைக்க வைத்த இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.