விழுப்புரம்: “பாமகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பழைய முகங்களாகிப் போனதால் மருமகளையும் பேத்தியையும் பிரச்சாரத்தில் இறக்கியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்” என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திமுக அமைச்சர்கள் அங்கு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் விக்கிரவாண்டி அருகே செ.புதூர், செ.கொளப்பாக்கம் கிராமங்களில் இன்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விக்கிரவாண்டி தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் 80 சதவீதம் திமுக வேட்பாளருக்கு கிடைக்கும்.
மாற்றுக் கட்சியில் உள்ளவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களும் மகளிர் உரிமைத்தொகை பெறுகிறார்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளும் புதுமைபெண் திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். எனவே, அந்த வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும். அண்ணாமலையும், பழனிசாமியும் விமர்சனத்துக்குட்பட்டவர்கள் தான். அவர்களின் விமர்சனங்களை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள். காய்த்த மரம்தான் கல்லடிப்படும்.
பாமகவில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து பழைய முகங்களாகிப் போனதால் புதுமுகங்களை அறிமுகம் செய்யும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தன் மருமகள், பேத்தி ஆகியோரை பிரச்சாரத்தில் இறக்கியுள்ளார்.
தமிழக முதல்வரின் திட்டத்தால் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்றுள்ளது. எனவே, பதிவாகும் வாக்குகளில் 80 சதவீத வாக்குகளை திமுக பெறும்” என்றார். அப்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் சேகர், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் விக்குமார், பொருளாளர் ரமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.