ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகள் விற்கப்படுவதாக புகார் – போலீஸ் விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு | Complaint that Sethupathi heir adopted by Madukkur bailiff is selling Ramanathapuram princely properties HC orders

1370851
Spread the love

மதுரை: மதுக்கூர் ஜாமீன்தாருக்கு தத்து கொடுக்கப்பட்ட ராமநாதபுரம் சேதுபதி வாரிசுகளில் ஒருவர் ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகளை விற்பனை செய்வதாக அளிக்கப்பட்ட புகாரை போலீஸார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரிராஜ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் ராமநாதபுரம் மாவட்ட சமஸ்தான ராஜபாஸ்கர் சேதுபதியின் பேரன். குமரன் சேதுபதி மகன் நாகேந்திர சேதுபதி, கடந்த 2010-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஜமீன்தார் கிருஷ்ணசாமி கோபாலர் தம்பதியினருக்கு சட்டப்படி தத்து கொடுக்கப்பட்டார். தற்போது அவர் அந்த குடும்பத்தின் சட்டப்படியான வாரிசாக இருந்து சொத்துகளை நிர்வகித்து வருகிறார்.

நாகேந்திர சேதுபதியின் தந்தை குமரன் சேதுபதி கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரது இறப்புக்கு பின் நாகேந்திர சேதுபதி வருவாய்த் துறையினர் உதவியுடன் தான் குமரன் சேதுபதியின் வாரிசு என சான்றிதழ் பெற்றுள்ளார். இந்த வாரிசு சான்றிதழ் அடிப்படையில் ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகளை விற்பனை செய்து வருகிறார்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சட்டவிரோதமாக வாரிசு சான்றிதழ் பெற்ற நாகேந்திர சேதுபதி மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரியின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, “மனுதாரர் புகார் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதியாததால், மனுதாரர் இங்கு மனு தாக்கல் செய்துள்ளார். எனவே மனுதாரர் புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் போலீசார் உரிய விசாரணை செய்து குற்றம் உறுதியானால், வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த விசாரணையை 3 வாரத்தில் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *