ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கிய கிழக்கு நோக்கிய கோயில். கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு குதிரை சிலைகள். ஒரு குதிரையில், பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்கள். மற்றொன்றில், பத்ரகாளி அம்மன் எழுந்தருளியுள்ளார்.
காலசந்தி மற்றும் சாயரட்சை பூஜையின்போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்குச் செய்யப்படுவது இத்தலத்தின் விசேஷம். கோயிலில் முதலில் நமக்கு ஜெயங்கொண்ட விநாயகர் காட்சி அருள்கிறார். அவரை தரிசித்து வேண்டி நாம் அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையை அடையலாம்.
கருவறையில் மூலவராக வள்ளி – தேவசேனா சமேதராக ரணபலி முருகன் அருள்பாலிக்கிறார். கருணை ததும்பும் இந்த முருகனை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

கோயிலின் பிராகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, சண்முக சக்கரம், நாகர் ஆகியோர் சந்நிதி கொண்டு அருள்கிறார்கள். கோயிலுக்கு வடக்கே தளவாவயிரவர் சேர்வைக்காரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. மிகவும் நேர்மறையான அதிர்வுகள் நிரம்பிய அந்த இடத்தில் சுப்பிரமணிய யந்திரமும், சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.
திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமியையும், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியையும் ஒரே தலத்தில் தரிசித்து, அந்த இரு தலங்களுக்கும் சென்று வந்த புண்ணியபலனை ஒருசேர அருள வல்லவர் பெருவயல் ரண பலி முருகன்.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். சகல நன்மைகளும் உங்கள் வீடுவந்து சேரும்.