ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக 24 மணி நேர மது விற்பனை – பக்தர்கள், பொது மக்கள் வேதனை | 24 hours Illegal liquor sale in Rameswaram

1377163
Spread the love

ராமேசுவரம்: புனித தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை மற்றும் ராமநாத சுவாமி கோயில் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வேதனை அடைந்துள்ளனர்.

நாட்டின் முக்கிய புனிதத் தலங்களில் ராமேசுவரம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால், இங்கு புனிதத்தை கெடுக்கும் வகையில் மதுக்கடைகள் இயங்கி வந்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ராமேசுவரம் தீவில் இயங்கிவந்த 11 மதுக்கடைகளில் 9 கடைகள் மூடப்பட்டன.

தற்போது, பாம்பனில் மட்டும் 2 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளையும் அகற்றி, அப்துல் கலாம் பிறந்த ராமேசுவரத்தை மது இல்லாத தீவாக மாற்ற வேண்டும் என்று கோரி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், பாம்பன் மதுக்கடைகளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து ராமேசுவரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி பகுதிகளி்ல் கூடுதல் விலைக்கு சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.50 முதல் ரூ.100 வரை விலை வைத்து விற்கின்றனர்.

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை மற்றும் ராமநாத சுவாமி கோயில் கிழக்கு நுழைவாயில் அருகேயும் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குடிசைத் தொழில்போல் இதில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். இதனால், அதிகாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரை எந்த நேரத்திலும் ராமேசுவரம் பகுதியில் மதுபாட்டில்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருகின்றன.

இளைஞர்கள், மீனவர்கள் கூடுதல் விலை கொடுத்து மது அருந்தி வருவதால், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இது தவிர, இங்கு மது அருந்துவோர் கோயிலுக்கு வரும் பக்தர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால், புனிதத் தல தன்மையை ராமேசுவரம் இழந்து வருகிறது.

எனவே, ராமேசுவரத்தில் மதுபான விற்பனையை முற்றிலுமாக தடுத்து, மீனவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையை பாதுகாக்க போலீஸார், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *