ராமேசுவரம்: ரூ.733 கோடி மதிப்பிலான ராமேசுவரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை எழும்பூரிலிருந்து தனுஷ்கோடிக்கு 1914 பிப்ரவரி 24-ம் தேதி போர்ட் மெயில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மேலும் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு பயணிகள் கப்பலும் இயக்கப்பட்டது.
இந்த ரயில் சேவையின் பொன்விழா ஆண்டில் 1964 டிசம்பர் 22 அன்று, தனுஷ் கோடியை தாக்கிய புயலில் ரயில் நிலையத்திலும், துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தனுஷ்கோடிக்கு வந்து கொண்டிருந்த போர்ட் மெயிலில் பயணம் செய்த 200-க்கும் மேற்பட்ட பயணிகளும் உயிரிழந்தனர்.
இந்த புயலால் ராமேசுவரம் – தனுஷ்கோடி இடையேயான ரயில் பாதை முற்றிலும் அழிந்து போனது. இதனால் தனுஷ்கோடிக்கு பதிலாக ராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தனுஷ்கோடியை புயல் தாக்கி 55 ஆண்டுகள் கழித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை 17.20 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க முடிவு செய்து சர்வே பணிகளை மேற்கொண்டது.
பிரதமர் அடிக்கல் நாட்டினார்: கன்னியாகுமரியில் 1.3.2019-ல் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி காணொலி மூலம் ரூ.208 கோடியில் தனுஷ்கோடி புதிய ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் சென்னை ஐஐடியை சேர்ந்த பொறியாளர்கள் தனுஷ்கோடிக்கான ரயில் பாதையை ஆய்வு செய்து ரயில் பாதையை புயல், கடல் காற்று மற்றும் மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க சாலை மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்தில் அமைக்க பரிந்துரைத்தனர்.
1964-ல் புயல் தாக்கியபோது அப்போதைய ரயில் தண்டவாளங்கள் சாலை மட்டத்திலிருந்து ஒரு மீட்டருக்கும் குறைவான உயரத்தில் இருந்தது. இதனால் தனுஷ்கோடிக்கான புதிய ரயில்வே பாதைக்கான நிதி தேவை ரூ.208 கோடியிலிருந்து ரூ.733 கோடியாக அதிகரிக்கப்பட்டது.
கைவிட்ட தமிழக அரசு: இந்நிலையில். தமிழக அரசு 21.04.2023 -ல் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ராமேசுவரம் – தனுஷ்கோடி பகுதிகள் உள்ளதால், ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியது. இதனால் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகளுக்கும் மேலாகியும் ராமேசுவரம் – தனுஷ்கோடி இடையேயான புதிய ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறிய தாவது: ராமேசுவரம் – தனுஷ்கோடி இடையேயான புதிய ரயில் பாதை 17.20 கி.மீ. தொலைவுக்கு ஒற்றை வழித்தடமாகவும், மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையாகவும் அமையும். இதில் ஜடாயு தீர்த்தம், கோதண்ட ராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் ஆகிய புதிய ரயில் நிலையங்களும் அமைக்கப்படும். ராமேசுவரம் – தனுஷ்கோடி இடையேயான பழைய ரயில் பாதையில் 28.6 ஹெக்டேர் வனத்துறையிடம் உள்ளது.
மேலும் 43.81 ஹெக்டேர் மாநில அரசுக்கு சொந்தமான நிலமும், 3.66 ஹெக்டேர் தனியார் நிலமும் தனுஷ்கோடி ரயில் பாதைக்காக கையகப்படுத்தப்பட வேண்டும். கடலோர சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறி தமிழக அரசு இந்த ரயில் பாதைக்கு ஆர்வம் காட்டவில்லை. தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கினால் விரைவில் ராமேசுவரம் – தனுஷ்கோடி ரயில் பாதைக்கான பணிகள் தொடங்கும், என்றனர்.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் பாதை அமைக் கப்படுவதன் மூலம் நாடு முழுவதிலும் இருந்து இங்கு வரும் பக்தர்கள் பயனடைவதோடு, இப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சியும் அடுத்த கட்டத்துக்கு நகரும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.