தமிழ்நாட்டில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திருப்பூர் மாவட்டத்தில் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி பறவைகள் சரணாலயம் ஆகியவற்றின் மூலம், நம் தமிழ்நாடு இப்போது 18 ராம்சார் தளங்களை கொண்டுள்ளது.
இந்த தொடர்ச்சியான சாதனை, தமிழ்நாடு வனத்துறையின் முயற்சியையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான திராவிட மாடல் ஆட்சியின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நரேந்திர மோடி, நமது நாட்டில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. ராம்சார் நிலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இயற்கையுடன் நாம் இணக்கமாக இருப்பதை குறிக்கிறது. மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கு சிறப்புப் பாராட்டுகள். இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற முயற்சிகளில் முன்னணியில் இருப்போம் என மோடி பதிவிட்டுள்ளார்.
ராம்சார் தளம் என்பது ராம்சார் மாநாட்டின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஈரநில தளமாகும்.